Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விவசாயி கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள்

திருச்சி: முன்விரோதத்தில் விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி, அவர்களது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா திருந்தியமலையை அடுத்த பாலப்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(44). இவருக்கு பாலப்பட்டியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகே அவருக்கும், அவரது சித்தப்பா அம்மாசிக்கும் பொதுவான கிணறு உள்ளது. கிணற்றுக்கு அருகே அம்மாசிக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த உத்தண்டன்(76) கடந்த 17ஆண்டுகளுக்கு முன் கிரயம் செய்தார்.

இந்நிலையில் கிணறு பயன்பாடின்றி பாழடைந்து கிடந்தது. இதனால் பழனிசாமி, உத்தண்டனிடம் கிணற்றை தூர்வாரி ஒன்றாக சேர்ந்து தண்ணீரை பகிர்ந்து விவசாயம் செய்வோம் எனக் கூறியுள்ளார். இதற்கு தங்களிடம் பணம் இல்லை என உத்தண்டன் கூறினார்.இதையடுத்து பழனிசாமி தனது சொந்த செலவில் கிணற்றை தூர்வாரி விவசாயம் செய்ய தொடங்கினார். இதை உத்தண்டன் பயன்படுத்தக்கூடாது என்றார். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பழனிசாமி, கடந்த 7.8.2024 அன்று வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது, அங்கு வந்த உத்தண்டன், அவரது மனைவி ராஜாமணி(65), மகன் அழகேசன்(45) ஆகியோர், பழனிசாமியிடம் தண்ணீர் கேட்டு தகராறு செய்தனர். அவர் தண்ணீர் தர மறுத்ததால் உத்தண்டனும், அழகேசனும் அரிவாளால் பழனிசாமியை சரமாரியாக வெட்டினர். ராஜாமணி கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பழனிசாமி இறந்தார்.

இதுகுறித்து முசிறி போலீசார் கொலை வழக்கு பதிந்து உத்தண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் உத்தண்டன், ராஜாமணி, அழகேசனுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார்.