அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் நான்கு இடங்களில் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் தேனி வந்தார். நேற்று காலை எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள ஓட்டல் கூட்ட அரங்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 12 விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க காத்திருந்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அவரது பேட்டியின் எதிரொலியாக, எடப்பாடி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் நடத்த இருந்த கலந்துரையாடல் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், எடப்பாடியை சந்திக்க வந்திருந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை தனித்தனிக்குழுவாக சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.