சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் வசிக்கும் இயற்கை விவசாயி சமூக ஆர்வலர் காசிராமன். இவர் கிட்டு ஐயா மரபு அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
மேலும் இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார். நாட்டு மாடு களை அழிவிலிருந்து காப்பாற்ற நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் பழமையான தொழில்களை மீட்டு எடுக்கும் வகையில் மண் பானை சட்டி தொழிலை விரும்பியவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதேபோல் அரிவாள், கத்தி, கோடரி போன்ற பொருள்களை செய்யும் பணிகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார். பெண்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் இலவச தையல் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் எந்த நேரமும் மழை நீரை சேமித்து அந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு தினந்தோறும் இலவசமாக குடிதண்ணீர் வழங்கி வருகிறார்.
இவரை தண்ணீர் பந்தல் காசி ராமன் என் றும், இயற்கை விவசாயி என்றும் பலரும் அழைத்து வருகின்றனர். இயற்கை விவசாயி காசிராமன் பொதுமக்களின் நலன் கருதி அக்கறை கொண்டு தினந்தோறும் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறார்.
காலை வேளையில் பசி என்று வருபவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். தற்போது பழமையை மீட்டெடுக்கும் வகையில் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற கிணறுகளை கண்டறிந்து அதனை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூர்வாரி நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்து வருகிறார்.
கிணற்று தண்ணீரை அனைவரும் பயன்படுத்தினால் அனைவரும் நோய் நொடியின்றி வாழலாம் என்ற உயர்ந்த சிந்தனையில் குறவலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தலைமையிலான கிணறுகள் தூர்வாரும் ஒரு குழுவை வைத்து கொண்டு துகர்ந்து போன கிணறுகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தூர்வாரி தந்து வருகிறார்.
மேலும் புதிய கிணறுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருவெண்காட்டில் புதிய கிணறு தோண்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். காசு கொடுத்து தண்ணீர் வாங்க கூடாது என்ற உயர்ந்த சிந்தனையில் இலவசமாக 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கி வருகிறார். தற்போது கிணறுகள் அமைக்கும் இவரின் மகத்தான பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.