Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்டு வங்கி கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடி விடுவிப்பு

டெல்லி: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்டு வங்கி கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடி விடுவித்தது. ரூ.8 ஆயிரம் கோடி கடனுதவி கோரப்பட்ட நிலையில் ரூ.3,700 கோடி விடுவிக்கப்பட்டதாக கூட்டுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி ரூ.2 லட்சம் வரை பிணையம் இல்லாமலும், ரூ.3 லட்சம் வரை பிணையம் பெற்றும் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிர்க்கடனானது ரொக்கம் மற்றும் பொருள் பகுதியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கூட்டுறவுத்துறையின் வரலாற்றில் முதல்முறையாக 2023-24-ம் நிதியாண்டில் ரூ.15 ஆயிரம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி ரூ.15 ஆயிரத்து 543 கோடி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டில் 17 லட்சத்து 37 ஆயிரத்து 460 விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 692 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று 2025-26-ம் நிதியாண்டுக்கும் ரூ.17 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளால் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட பயிர்க்கடனைவிட ரூ.500 கோடி கூடுதலாகும்.

இவ்வாறு பயிர்க்கடன்கள் வழங்குவதற்கு உதவியாக இருக்கும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியிடம் (நபார்டு வங்கி) இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனுதவி கோரப்பட்டது. அதற்கு நபார்டு வங்கியானது ரூ.3 ஆயிரத்து 700 கோடியை கூட்டுறவுத்துறைக்கு கடந்த வாரம் கடனாக விடுவித்து உள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.