Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேலிக்கூத்து

பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு ‘தீவிர சிறப்பு திருத்தம்’ என பெயரிட்டுள்ளது. தற்போது பீகாரை மையம் கொண்டிருக்கும் இந்த பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திருத்த பணிக்கான தொடக்க புள்ளியாக 2003ம் ஆண்டின் பீகார் வாக்காளர் பட்டியல் அமைந்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஏறக்குறைய 5 கோடி வாக்காளர்கள். இதற்கு பின்னர், 2025ம் ஆண்டு வரையிலான வாக்காளர் பட்டியல்​களில் இணைந்து ​கொண்​ட​வர்கள் ஏறக்குறைய 3 கோடி பேர். இந்த இரு சாராரும், தேர்தல் ஆணையம் இப்போது உருவாக்கி​யிருக்கும் புதிய கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி, தற்கால படமும் ஒட்டி, ஒப்பமிட்டு ஆணையத்தின் தளத்தில் உறுதிமொழி பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்காத வாக்காளர் பெயர் அதிரடியாக நீக்கப்படும் என்பது தேர்தல் ஆணையத்தின் கறாரான உத்தரவு.

இரண்டாம் பிரிவினர் (3 கோடி பேர்) தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். 1.7.1987 தேதிக்கு முன்பு பிறந்​தவர்களாக இருந்தால், தங்களது பிறப்பு சான்று, அதற்கு பின்பு பிறந்​தவர்களாக இருந்தால், கூடுதலாக அவர்களது பெற்றோர் பிறப்பு சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த சான்றுகள் மூலம் தமது பிறந்த நாளையும், பிறந்த ஊரையும் அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

சேர்த்தல், நீக்கல் பணிகள் முடிந்து இறுதிப்பட்டியல் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த இறுதிப்பட்டியலில் இடம்பெறுவோர் மட்டுமே நவம்பர் மாதம் நடக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் விதித்​துள்ள காலக்​கெடு வெறும் 25 நாட்கள் மட்டுமே. அதற்குள் 8 கோடி வாக்காளர்​களின் படிவங்கள் நிரப்​பப்​பட்டு, 3 கோடி வாக்காளர்​களின் ஆவணங்கள் இணைக்​கப்​பட்டு, அவை பதிவேற்​றம் செய்யப்பட வேண்டும்.

இதற்கு முன்பு, மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அவகாசம் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், தற்போது வெறும் 25 நாட்களில் இந்தியன் என நிரூபிக்க வேண்டும் என கழுத்தை பிடிக்கிறது. அதாவது, கோடிக்கணக்கான வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என எதிர்கட்சிகள் கடுமையாக விமர்​சித்துள்ளன. இதன் எதிரொலிதான் நாடாளுமன்ற முடக்கம்.

இந்த விவகாரம் தொடர்பாக, மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்கட்சி எம்.பி.க்​கள் எழுப்​பிய கேள்விக்கு, ஒன்றிய பா.ஜ., அரசிடமிருந்து பதில் இல்லை. விளைவு, இரு அவை​களும் நேற்று 5வது நாளாக முடங்​கின. ஒன்றிய அரசின் பிடிவாதத்தால் மக்களின் வரிப்பணம் ரூ.25 கோடி வீணாகியுள்ளது. முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பொறுப்பு, தேர்தல் ஆணையத்​திடம் இருந்தது. ஆனால், இப்போது அந்த பொறுப்பு வாக்காளரின் தலையிலேயே ஏற்றப்​பட்டுள்ளது.

அதாவது, வாக்காளர்கள் அனைவரும் தத்தமது படிவத்தை பதிவேற்றுவதன் மூலமே தங்களது வாக்குரிமையை தக்கவைத்​துக்​கொள்ள முடியும். இந்திய வரலாற்றில், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை. பீகாரை நிரந்தரமாக கொண்டு, புலம்​பெயர்ந்து வாழும் லட்சக்​கணக்கான தொழிலா​ளர்​களின் வாக்குரிமையை நிரந்தரமாக பறிக்கும் செயலாகவே தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது.