Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெ.ஆ உடன் இன்று 2வது ஓடிஐ தடைகளை தகர்த்து தொடரை வென்று காட்டுமா இந்தியா? விராட், ரோகித் ரன் வேட்டையால் ரசிகர்கள் உற்சாகம்

ராய்ப்பூர்: தென் ஆப்ரிக்கா அணியுடன் இன்று நடக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று, தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. கடந்த நவ. 30ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி ஜாம்பவான்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மாவின் அட்டகாச ஆட்டத்தால் இந்தியா, 17 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்து, தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது ஒரு நாள் போட்டி, ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. 2027ல், உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், கோஹ்லியும், ரோகித்தும் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி தங்கள் இருப்பை தவிர்க்க முடியாத வகையில் சாதித்து வருகின்றனர். அவர்களின் அதிரடி ஆட்டம் இன்றும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியில் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் மெச்சத் தகுந்ததாக இல்லை. அதேசமயம், 6வது வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், சிறப்பாக ஆடி தனது நிலையை நியாயப்படுத்தி உள்ளார்.

இந்திய பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் குல்தீப் யாதவ், இன்றும் அதிரடி காட்டலாம். தென் ஆப்ரிக்கா அணியை பொறுத்தவரை, பேட்டிங் லைன் சிறப்பானதாக அமைந்துள்ளது. அந்த அணியின் மார்கோ யான்சன், அட்டகாசமாக ஆடி இந்திய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்து வருகிறார். மேத்யூ பிரீட்ஸ்கியின் பேட்டிங் அற்புதமாக உள்ளது. கடைசி கட்டத்தில் களமிறங்கும் கோர்பின் பாஷ், மிரட்டலாய் ஆடி கதிகலங்கச் செய்து வருகிறார். இன்றைய போட்டியில் இரு அணிகளும் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டுவர் என்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.

* களத்தில் யாருக்கு இடம்?

இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி, ரிஷப் பண்ட், ரோகித் சர்மா, திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் புரூவிஸ், குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஸி, ரூபின் ஹெர்மான், அய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், கோர்பின் பாஷ், மார்கோ யான்சன், பிரெநீலன் சுப்ராயன், ஒட்நீல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், கேஷவ் மகராஜ், லுங்கி நிகிடி.