திருமணத்திற்கு 2 நாட்கள் இருந்த நிலையில் வருங்கால கணவர் தாக்கியதால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன்: பிரபல நடிகை உருக்கமான பேட்டி
அப்யூஜா: வருங்காலக் கணவர் அடித்ததால், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது திருமணத்தையே நிறுத்தியதாக பிரபல நைஜீரிய நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
நைஜீரியாவின் புகழ்பெற்ற மூத்த திரைப்பட நடிகையான கோஸி நவ்சு, சமீபத்தில் ‘டாக் டு பி’ என்ற நிகழ்ச்சிக்கு அளித்த உருக்கமான பேட்டியில், ‘குடும்ப வன்முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். காதலில் துரோகத்தைக் கூட மன்னிக்கலாம், ஆனால் உடல் ரீதியான துன்புறுத்தலை ஒருபோதும் மன்னிக்க முடியாது. பெண்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, எனது நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன். அப்போது எனது வருங்காலக் கணவர் என்னை மிகக் கொடூரமாகத் தாக்கினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவருடன் வாழ்நாள் முழுவதும் வன்முறையைச் சகித்துக் கொண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்து, திருமணத்தை நிறுத்தும் கடினமான முடிவை எடுத்தேன். ஒரு ஆண் உங்கள் மீது ஒருமுறை கை வைத்துவிட்டால், அவர் அதை ஒருபோதும் நிறுத்த மாட்டார். கொடுமைப்படுத்தும் கணவருடன் பெண்கள் வாழ வேண்டாம். திருமணம் என்பது ‘வாழ்வா, சாவா’ போராட்டம் அல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும். வன்முறையில் இருந்து விலகி பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
