தங்களுக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சட்ட உதவி கேட்டு முறையீடு: வாதாட வழக்கறிஞரை நியமிக்க கோரிக்கை
கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி மகனை இழந்த தாயும், மனைவியை இழந்த கணவரும் சட்ட உதவி கேட்டு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் நேற்று முறையிட்டனர். வாதாட வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது சம்பந்தமான வழக்கின் விசாரணை இதுநாள் வரை எஸ்ஐடியினர் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் தங்கள் அனுமதியில்லாமல், தங்களுக்கே தெரியாமல் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிலர், அதிர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரித்திக்கின் தயார் ஷர்மிளா மற்றும் சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகிய இருவரும் நேற்று காலை 11.30 மணியளவில் கரூர் ஐந்துரோடு அருகே உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார்பு நீதிபதி அனுராதாவிடம், தங்களுக்காக வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். தனது கணவர் பன்னீர்செல்வம், தன்னையும் மற்றும் மகனையும் விட்டு பிரிந்து சென்று 8ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பன்னீர்செல்வம் தனக்கே தெரியாமல், பணம் பறிக்கும் நோக்கத்துடன் மோசடியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதே போல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏமூரை சேர்ந்த சந்திராவின் கணவர் செல்வராஜ், தனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றியதோடு, தன்னிடம் மோசடியாக கையெழுத்து பெற்று அந்த கையெழுத்தை வைத்து சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவிற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்றார். தங்களுக்கு தெரியாமல் மோசடியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், தங்கள் நிலையை விளக்கவும், தங்களுக்காக வாதாடவும் வழக்கறிஞரை நியமித்து சட்ட உதவி செய்ய வேண்டும் என இருவரும் முறையிட்டனர். டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், அந்த வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்ட இருவரையும் வீடியோ காலில் பேச வைத்ததாகவும், தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இவர்களது வழக்கறிஞர் தமிழ்முரசு தெரிவித்தார்.