Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாயின் மரணத்திற்கு முன்பே விவாகரத்து பெற்றிருந்தால்தான் கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்: மகளின் மனு மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: தாயின் மரணத்திற்கு முன்பே சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்று கூறிய மத்திய நிர்வாக தீர்ப்பாயம், குடும்ப ஓய்வூதியம் கேட்டு தாக்கல் செய்த மகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றியவர் குப்பம்மாள். இவரது கணவர் ரயில்வேயில் பணியாற்றினார். கடந்த 1977ல் அவர் பணிக்காலத்தில் மரணம் அடைந்ததால் குப்பம்மாளுக்கு கருணை அடிப்படையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை கிடைத்தது. இவரின் மகள் சரஸ்வதி. இவருக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2001ல் குப்பம்மாள் மரணமடைந்தார்.

இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் வேலையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பினார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் எம்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கணவரிடம் விவாகரத்து பெற்ற மனுதாரருக்கு அவரின் தாயின் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது. அவரது தாய் இறப்பதற்கு முன்பே பஞ்சாயத்தார் முன்னிலையில் 1998ல் மனுதாரருக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மனுதாரரின் மனுவை ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து 2 மாதங்களில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் தாய் மரணமடைந்த பிறகே மனுதாரர் திருச்சி சார்பு நீதிமன்றத்தில் 2010ல் விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 1998ல் பஞ்சாயத்தார் முன்பு தரப்பட்ட விவாகரத்து ஒப்பந்தம் சட்டரீதியானதல்ல.

நீதிமன்றத்தில் பெறப்பட்ட விவாகரத்தின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நிவாரணம் தர முடியும். மனுதாரருக்கு, தாய் மரணத்திற்கு பிறகே அவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளதால், விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் தரும் விதி மனுதாரருக்கு பொருந்தாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர், மனுதாரரின் தாய் 2001ல் மரணமடைந்துள்ளார். மனுதாதர் 2010ல்தான் விவாகரத்து பெற்றுள்ளார். பஞ்சாயத்தார் தீர்ப்பு சட்ட ரீதியான விவாகரத்தும் ஆகாது. எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரிய மனு தள்ளுபடி ெசய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.