Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயிர்விடும் முன்பு குழந்தைகளை காப்பாற்றிய உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் நேரில் வழங்கினார்

காங்கயம்: வெள்ளகோவிலில் நெஞ்சுவலியால் உயிர்விடும் முன்பு பள்ளி வேனை சாலையோரம் நிறுத்தி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தவர் காங்கயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (49). இவர் கடந்த 24ம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் 20 குழந்தைகளை, வேனில் ஏற்றிக்கொண்டு கோவை-திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இருந்தபோதிலும் அதை தாங்கிக்கொண்ட வேனில் இருந்த குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் வேனை சாதுரியமாக சாலையோரம் நிறுத்தினார்.

பின்னர் அவர் உயிரிழந்தார். பள்ளி குழந்தைகளை காப்பாற்றி தன்னுயிர் நீத்த சேமலையப்பன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காங்கயம், சத்யா நகரில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது பெற்றோர் மற்றும் மகன்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதேபோல், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பள்ளி வேன் டிரைவர் சேமலையப்பன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சேமலையப்பன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.