உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கல் கரூர் துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வலியுறுத்தல்
கரூர்: கரூர் துயர சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்பி வேணுகோபால் தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் (பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்) வேணுகோபால் எம்பி நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்டத்தில் பறிபோன உயிர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. மகனை, மகளை, தாயை, தந்தையை என பல உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த கோர சம்பவம் நடந்தது முதல் கரூர் எம்பி ஜோதிமணி, அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.
கரூர் சம்பவத்தில் நெருங்கிய உறவுகளை பிரிந்து வாடுவோருக்கு என்ன ஆறுதல் கூறினாலும் அது ஈடாகாது. இந்த கஷ்டமான காலத்தில் அவர்களுடன் இருந்து உதவி செய்யவே எங்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அனுப்பி வைத்தார். மேலும் சிகிச்சை பெற்று வருவோர் விரைவாக உடல்நலம் தேறி வீடுதிரும்ப வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கஷ்ட காலத்தில் அவர்களுடன் நாங்கள் உள்ளோம். அவர்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறது காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார்.