பலியான 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டம் கரூர் பயண முழு விவரத்தை எஸ்பியிடம் தர டிஜிபி கடிதம்
சென்னை: கரூரில் 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்க செல்லும் விஜய் பயணம் குறித்த முழு விவரங்களையும் எஸ்பியிடம் வழங்க வேண்டும் என டிஜிபி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27ம் தேதி கரூரில் பரப்புரை செய்தார். அப்போது 4 மணி நேரம் காலதாமதமாக வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உள்பட 41 பேர் சிக்கி உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் போலீசாரின் கைதுக்கு பயந்து தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுடன் நடிகர் விஜய் 11 நாட்களுக்கு பிறகு வீடியோ காலில் பேசினார். அதற்கு முன்பு கரூர் சம்பவத்திற்காக நடிகர் விஜய் பேசி வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தது தொடர்பாக எந்த மன்னிப்பும் அவர் கேட்கவில்லை. அதற்கு பதிலாக தனது கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இது கரூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், கரூர் விபத்து தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். தமிழக அரசும் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அனைத்து கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த பிறகும் விபத்துக்கு காரணமான தவெக தலைவர் நடிகர் விஜய் இதுவரை நேரில் செல்ல வில்லை. இது பொதுமக்கள் மற்றும் தவெகவினரிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளார். அதுதொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநருக்கு இ-மெயில் மூலம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் தவெக நிர்வாகிகள் சார்பில் நேற்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் தவெக வழக்கறிஞர் அறிவழகன் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில், தவெக தலைவர் விஜய், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கரூர் செல்ல உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும், தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.
இதற்கிடையில், கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு நேற்று டிஜிபி அலுவலகம் பதில் மெயில் அனுப்பியுள்ளது.
அதில் ‘‘தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். நிகழ்ச்சி தொடர்பாக தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்டவுடன் அந்நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.
* சிஆர்பிஎப் அதிகாரிகள் விஜய் வீட்டில் ஆய்வு
கரூரில் நடிகர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்தநிலையில், பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு நொய்டாவிலிருந்து சிஆர்பிஎப் தலைமையிடத்து டிஐஜி சஞ்சய் குமார், பெங்களூரு கமாண்டன்ட் மனோஜ் குமார் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ள நிலையில் அவரது வீட்டுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து சுமார் 15 நிமிடம் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.