கோவை: எடப்பாடி பழனிச்சாமி குடும்ப அரசியல் செய்கிறார் என மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி மாஜி அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடுவும் விதித்தார். இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சி பதவிகளையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்ற செங்கோட்டையன், அங்கு ஓ. பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன், 2 நாட்களுக்கு முன் குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 53 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் தனக்கு விளக்கம் கேட்டு எந்தவித நோட்டீசும் வழங்காமல் சர்வாதிகாரமாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கி இருப்பதாகவும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே உள்ளதாகவும், அவரை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை கட்சியை விட்டு நீக்கியது தொடர்பாகவும், அவரது பொதுச்செயலாளர் பதவி குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை குள்ளம்பாளையம் வீட்டிலிருந்து கிளம்பிய செங்கோட்டையன் கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துவிட்டு வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். இப்போது வருகின்ற பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும்போது, இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடுகள் இருப்பது என்பது நாடறிந்த உண்மை.
ஒருவருடைய வாழ்க்கை, அரசியலை பொறுத்தவரை பல்வேறு கருத்துகளை பரிமாறினாலும்கூட, இந்த இயக்கத்திற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரையிலும் இயக்கம் வலிமை பெற வேண்டும், இந்த இயக்கம் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் என் பணிகளை நான் மேற்கொண்டு வரு
கிறேன்.
தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் தத்துவம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
