Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

குடும்ப தகராறு முற்றியதால் மனைவி, மாமியாரை சுட்டுக்கொன்ற சிறைக்காவலர்: போலீஸ் சுற்றி வளைத்ததால் பீதியில் தற்கொலை

குர்தாஸ்பூர்: குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர், போலீசார் சுற்றி வளைத்ததால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மத்திய சிறையில் காவலராக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரரான குர்பிரீத் சிங்குக்கும் அக்விந்தர் கவுர் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குர்பிரீத்தின் சித்திரவதை காரணமாக, அக்விந்தர் கவுர் தனது தாயார் குர்ஜீத் கவுர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மாமியார் வீட்டிற்கு குர்பிரீத் சிங் சென்றார். வீட்டிற்குள் இருந்த மாமியார் வீட்டின் கதவை திறந்ததும் அவரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். பின்னர் வீட்டிற்குள் இருந்த தனது மனைவியையும் சுட்டுக் கொன்றார். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இந்த இரட்டைக் கொலையை செய்த பின்னர், அங்கிருந்து தப்பித்த குர்பிரீத் சிங், குர்தாஸ்பூரில் உள்ள ஸ்கீம் எண் 7 என்ற குடியிருப்பு பகுதியில் பதுங்கிக் கொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்து, அவரை சரணடையுமாறு சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இணங்க மறுத்து, தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக மிரட்டினார். இறுதியில், தான் வைத்திருந்த அரசுக்குச் சொந்தமான ஏகே-47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குர்தாஸ்பூர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா கூறுகையில், ‘குடும்பத் தகராறு காரணமாக குர்பிரீத் சிங் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை சரணடையுமாறு அறிவுறுத்தியும் அவர் கேட்காமல் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

இதுகுறித்து அக்விந்தரின் சகோதரி பர்மிந்தர் கவுர் கூறுகையில், ‘குர்பிரீத் சிங் ஒரு மனநோயாளி போல எனது சகோதரியை மனரீதியாக சித்திரவதை செய்தார். இதுபற்றி நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். தாய் வீட்டிற்கு வந்த பிறகும் தொலைபேசியில் அழைத்து, கொலை செய்து விடுவதாக என் சகோதரியை மிரட்டி வந்தார். ஆனால் இப்படி ஒரு கொடூரத்தை அவர் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்து என் சகோதரியை அழைத்தார். அவர் கதவைத் திறந்ததும் இருமுறை சுட்டார், என் தாயையும் சுட்டுக் கொன்றார்’ என கண்ணீருடன் தெரிவித்தார்.