சென்னை: 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்ற தகவல் வதந்தி என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, விவசாயம் மற்றும் வணிக இணைப்புகள் என சுமார் 3 கோடிக்கும் மேல் மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும்.
இந்த வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் ஒரு வீட்டிற்கு மட்டுமே 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும் என்றும் மற்ற வீடுகளுக்கு மானியம் வழங்கப்படாது என்று தகவல் பரவி வந்தது. இந்த தகவலை தற்போது மின் வாரியம் மறுத்துள்ளது. மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படாது எனவும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்வை. வீட்டு பயன்பாட்டிற்களை மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.