ஆந்திராவில் ‘ஏஐ’ பயன்படுத்தி கைவரிசை முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் போலி வீடியோ அழைப்புகள்: தெலுங்கு தேசம் மாவட்ட தலைவர்களிடம் பணம் மோசடி
திருமலை: ஏ.ஐ.தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு) நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா ஆகியோர் பேசுவது போல் வீடியோ அழைப்பு செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி, கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்துப்பள்ளியைச் சேர்ந்த சில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தேவினேனி உமா என்று கூறி ஒருவர் வீடியோ காலில் பேசியுள்ளார். கட்சித் தொண்டர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவ அவர் கேட்டுக் கொண்டதால், பலர் ஆயிரக்கணக்கில் கூகுள் பே மூலம் தலா ரூ.35 ஆயிரம் அனுப்பினர்.
அதேபோல் மீண்டும் கடந்த 7ம் தேதி, அந்த நபருக்கு தல்வர் சந்திரபாபுவைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் வீடியோ காலில் பேசினார். அவர் கூறியபடி தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியின் அங்கீகார கடிதங்களை பெற 18 தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கடந்த 8ம் தேதி விஜயவாடா சென்று குறிப்பிட்ட ஓட்டலில் தங்கினர்.
இதற்கிடையில், ஓட்டல் ஊழியர்கள் உணவு கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தியதால், ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விசாரித்தபோதுதான் ஏஐ மூலம் வீடியோ காலில் பேசி அவர்கள் ஏமாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.