Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போலி சாமியார் சதுர்வேதி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாய்ந்தது

சென்னை: சென்னை தொழிலதிபரின் மனைவி, அவரது 16 வயது மகளை நேபாளம் கடத்தி சென்று தொடர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் நேரில் ஆஜராகாத போலி சாமியாரான சதுர்வேதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புதிதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தி.நகர் பகுதியில் ராமனுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையை வெங்கட சரவணன்(எ)பிரசன்ன வெங்கடாசாரி சதுர்வேதி என்பவர் நடத்தி வந்தார். இவர் தன்னை ‘கிருஷ்ணனின் அவதாரம்’ என்று தனக்கு தானே அறிவித்து கொண்டு சதுர்வேதி சாமியாராக வலம் வந்தார். தனது அறக்கட்டளைக்கு வரும் பக்கதர்களை ஈர்க்கும் வகையில், அசிரியை வெண் பொங்கலாக மாற்றுவது போன்ற சித்து விளையாட்டுகள் செய்து வந்தார்.

இவரது ஆன்மீன சொற்பொழியால் ஈர்க்கப்பட்டு, சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் அடிக்கடி சாமியார் சதுர்வேதியை சந்தித்து ஆர்சீர்வாதம் பெற வந்தார். அப்போது தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது 16 வயது மகளை சதுர்வேதி தன் வசப்படுத்தி, தனது சீடர்களாக மாற்றிவிட்டார்.

பின்னர் தொழிலதிபரின் வீட்டிற்கு அடிக்கடி சதுர்வேதி வந்து, பூஜைகள் செய்வதாக கூறி அவரது மனைவி மற்றும் மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்து தொழிலதிபரின் மனைவி, மகள் மற்றும் அவரது வீட்டையும் அபகரித்து கொண்டார். அதோடு இல்லாமல் தொழிலதிபர் மனைவி மற்றும் அவரது 16 வயது மகளை நேபாளத்திற்கு கடத்தி சென்றுவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர், சாமியார் சதுர்வேதி மீது போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சாமியார் சதுர்வேதி தொழிலதிபர் மனைவி, மகளை சொற்பொழிவுக்கு நேபாளம் அழைத்து சென்று அங்கு இருவரையும் அறையில் அடைத்து தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து சாமியார் சதுர்வேதி மீது கற்பழிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2004ம் ஆண்டே வழக்கு பதிவு செய்து, தனிப்படை போலீசார் நேபாளம் சென்று சாமியார் சதுர்வேதியை கைது ெசய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீனில் சதுர்வேதி சாமியார் வெளியே வந்தார்.

சதுர்வேதி சாமியாரால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்கள் பலர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி இதுவரை சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் மட்டும் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது அடுத்தடுத்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், திடீரென கடந்த 2016ம் ஆண்டு சதுர்வேதி சாமியார் தலைமறைவானார். பிறகு போலி சாமியார் சதுர்வேதியை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

போலீசாருக்கு சதுர்வேதியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பிறகு சாமியார் சதுர்வேதியை கடந்த 2016ம் ஆண்டே நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

அதே நேரம், தொழிலதிபர் மனைவி, அவரது 16 வயது மகள் பாலியல் வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ‘ராமனுஜர் மிஷன் டிரஸ்ட்’ நிர்வாக அறங்காவலரான வெங்கடசரவணன்(ஏ)எஸ்.ஏ.ஆர்.பிரசன்ன வெங்கடாசாரி சதுர்வேதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாலும், பிடியாணை பிறப்பித்தும் காவல்துறையினரால் தேடப்பட்டும், இதுவரை கிடைக்கப்படாத காரணத்தாலும், ‘84- பிஎன்எஸ்எஸ்’ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் வரும் கடந்த மே 23ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் சதுர்வேரி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் போலி சாமியார் சதுர்வேதி நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த பிறகும், தொடர்ந்து தலைமறைவாக சதுர்வேதி இருந்து வருவதால், மத்திய குற்றப்பிரிவு கடந்த 18ம் தேதி சாமியார் சதுர்வேதி மீது பிஎன்எஸ் 209 சட்டப்பிரிவின் கீழ், அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.