கள்ளக்காதல் விவகாரத்தில் மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலை: தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
சென்னை: மெரினா கடற்கரையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளிகளை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகே உள்ள கடற்கரையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் பொதுமக்கள் கடற்கரையில் தூங்க சென்றனர்.
அப்போது மணல் பரப்பில் ஒருவர் தலையின் பின்புறம் பலமான வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் உடனே மெரினா போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி மயிலாப்பூர் உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் மெரினா இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் விரைந்து சென்று, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது சட்டை பையில் இருந்த ஏடிஎம் கார்டை வைத்து விசாரித்த போது, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி நகரை சேர்ந்த அந்தோணி(40) என தெரியவந்தது. இருவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது. அந்தோணிக்கு பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த போது, இளம் பெண் உறவினர்கள் மற்றும் பெண்ணின் மகள்கள் அந்தோணியை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தோணி நேற்று இரவு தனது அக்காவுக்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதாக அவரது மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு தனது கள்ளக்காதலியை சந்திக்க அந்தோணி மெரினா வந்துள்ளார். பிறகு இருவரும் கடற்கரையில் நேற்று நள்ளிரவு ஒன்றாக பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்தோணியை சுற்றி வளைத்து கத்தியால் தலையில் வெட்டுவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஆட்டோ டிரைவர் அந்தோணியை கொலை செய்த நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனர். மேலும், அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

