Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போலி தூதரக காரை பயன்படுத்தி கொண்டு 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு: வலைவீசி தேடும் டெல்லி போலீசார்

புதுடெல்லி: டெல்லியில் 17 கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார், போலி தூதரக காரில் தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளையான தக்ஷிணாம்னாய  சாரதா பீடத்தின் கீழ் இயங்கும்  சாரதா இந்திய மேலாண்மைக் கழகம் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக உள்ள சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி, அங்கு முதுகலை மேலாண்மை பட்டயப்படிப்பு பயிலும் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

தகாத வார்த்தைகளைப் பேசுவது, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது, கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டினர். மேலும், சாமியாரின் பாலியல் அத்துமீறல்களுக்கு இணங்குமாறு ஆசிரமத்தில் உள்ள பெண் பேராசிரியர்களும், நிர்வாக ஊழியர்களும் தங்களை வற்புறுத்தியதாகவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக சிருங்கேரி மடத்தின் நிர்வாகி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அளித்த புகாரின் பேரில், வசந்த் குஞ்ச் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சைதன்யானந்தா, ஆசிரமத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அவரைப் பிடிக்க டெல்லி காவல்துறை சார்பில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விசாரணையில், அவர் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக ‘39 UN 1’ என்ற போலி தூதரக எண் பலகை பொருத்தப்பட்ட வோல்வோ காரை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. தற்போது அந்த காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 32 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிருங்கேரி தக்ஷிணாம்னாய  சாரதா பீடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்களுக்கும் சைதன்யானந்தாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், அவரது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘சைதன்யானந்தாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, பொருத்தமற்றவை மற்றும் மடத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை’ என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவரது நடத்தை குறித்து தாங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தலைமறைவான சாமியாரை டெல்லி போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.