Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ஆன்லைன் மூலம் ரூ.203 கோடி மோசடி: கைதான 2 பேர் சிறையிலடைப்பு

புதுச்சேரி: நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.203 கோடி மோசடி செய்த 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஷ்குமார். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 127 அனுப்பினார். பின்னர் வேலை எதுவும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், புகார்தாரரிடம் மோசடியில் ஈடுபட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கண்குசரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் (எ)ஐகத் நாயக் என தெரியவந்தது. மேலும் அவர்கள் மோசடி செய்த பணத்துடன் துபாய்க்கு உல்லாச பயணம் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மற்ற மற்ற நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்திய குடியேற்றத்துறை மூலமாக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி கண்குசரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் (எ)ஐகத் நாயக் ஆகியோர் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்தனர். அங்கு அவர்கள் 2 பேரையும் இந்திய விமானத்துறை அதிகாரிகள் பிடித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். கைதானவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைதான கண்கு சரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் ஆகியோர் நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி உள்ளதும் இருவர் மீதும் 23 மாநிலங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் கைப்பற்றப்பட்ட 13 வங்கி கணக்குகளின் மூலம் ரூ.203 கோடிக்கு மேல் ஆன்லைன் மோசடி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கண்குசரண் சிபரம்பணிகராகி, அபிஷேக் (எ) ஜகாத் நாயக் ஆகியோரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் புதுவை நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.