திருவனந்தபுரம்: தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் முண்டக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷினு (38). இவர் சங்கு ஜோதிடம் என்ற பெயரில் தன்னுடைய வீட்டில் வைத்து பேய் விரட்டுவது உள்ளிட்ட மந்திரவாதங்களை செய்து வருகிறார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண், மந்திரவாதி ஷினுவை சந்தித்து தன்னுடைய 11 வயது மகளுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றும், அதற்கு ஏதாவது பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு மறுநாள் மகளை அழைத்து வருமாறு மந்திரவாதி கூறினார்.
இதன்படி அந்த பெண் தன்னுடைய மகளை அழைத்து கொண்டு மந்திரவாதி ஷினுவை சந்திப்பதற்காக சென்றார். அப்போது மகளை தனி அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஷினு கூறினார். இதைத்தொடர்ந்து மகளை மந்திரவாதியின் அறைக்கு அனுப்பி வைத்து அந்தப் பெண் வெளியே காத்திருந்தார். சுமார் 1 மணி நேரம் கழித்து பயத்துடன் வெளியே வந்த அந்த சிறுமி, மந்திரவாதி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ஷினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில் பூஜை அறையில் இருந்து ஏராளமான அரிவாள், பிரம்பு மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பேய் விரட்டுவதாக கூறி இவர் பாதிக்கப்பட்டவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


