டேராடூன்: ரூ.15.17 கோடி மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நபர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் புனேதா. புனேதா, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பித்தோராகரின் பல பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் ரூ.15.17 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஜெகதீஷ் புனேதா மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த மோசடி குறித்து மாநில சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், கெஜதீஷ் புனேதா, பித்தோராகர் மாவட்டத்தில் இருந்து தப்பி ஓடி, துபாயில் தலைமறைவாக பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் பதுங்கி இருந்த கெஜதீஷ் புனேதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெகதீஷ் புனேதா கடந்த 13ம் தேதி வெற்றிகரமாக துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அழைத்து வரப்பட்டார்.


