சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில் போலியான ஆவணங்கள் தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வருவதாக கிடைக்கப் பெற்று தகவலின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தானாக முன்வந்து தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளை பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 5ம் தேதி புஷ்பராஜ் (எ) சதிஷ் (39), கோமதி (38), கரிகாலன் (62), முரளி (64), அருண் வில்பர்ட் (43), மார்டின் திபுராஜ் (49), கல்யாண சுந்தரம் (63), மதன் ரூபன் (49) ஆகியோர்களை கைது செய்து வீட்டில் சோதனை செய்த போது 1 லேப்டாப், 3 செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் போலி ரூ.2000 மற்றும் ரூ.500 கட்டுகள் மொத்தம் 130 கட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றியும் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.
மேலும் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டில் இருந்து கோடி கணக்கில் பணம் கிடைக்கும் ஆர்.பி.ஐ மூலமாக பணம் கிடைக்கும் இதுபோன்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
