Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவி 10 ஆண்டாக மும்பையில் வசித்த இந்தோனேசிய பெண் கைது

சிலிகுரி: போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இந்தோனேசியப் பெண், மேற்குவங்க எல்லையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தியா - நேபாள எல்லையில் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேரும், அமெரிக்கர் ஒருவரும் இதேபோன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது இந்தோனேசியப் பெண் ஒருவர் போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம், சிலிகுரி அருகே உள்ள பனிடங்கி எல்லையில் சஷஸ்த்ர சீமா பல் (எஸ்.எஸ்.பி) படையினர் நடத்திய சோதனையின்போது, ‘நின்யோமன் முர்னி’ என்ற பெயரில் தன்னை இந்தியர் எனக் கூறிக்கொண்டு பெண் ஒருவர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த படையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் இந்தோனேசியாவின் பாலியைச் சேர்ந்த நி கடெக் சிசியானி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து இந்தோனேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற பல போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையில் உள்ளூர் தரகர் மூலம் இந்த போலி ஆவணங்களைப் பெற்றதாகவும், இவற்றைப் பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த போலி அடையாளங்களைப் பயன்படுத்தி இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீது வெளிநாட்டினர் சட்டம், கடவுச்சீட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் சிலிகுரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கரிபாரி போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.