பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(68). அப்பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என வந்த ரகசிய தகவலின் பேரில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று அம்மாபாளையத்திற்கு சென்று கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினார்.
இதில் அன்பழகன் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பெரம்பலூர் ஊரக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், போலி டாக்டர் அன்பழகன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அன்பழகனை இரவு பெரம்பலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.