Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து திரைப்படம், தங்கக்கட்டிகளை விற்ற சகோதரர் புகார் கொடுத்த சினிமா தயாரிப்பாளருக்கு மகளை கடத்தி கொலை செய்வதாக மிரட்டல்: லண்டனில் இருந்து தமிழக, கேரள டிஜிபியிடம் பரபரப்பு புகார்

கோவை: போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து திரைப்படம், தங்கக்கட்டிகளை விற்ற சகோதரர் குறித்து புகார் கொடுத்த சினிமா தயாரிப்பாளருக்கு மகளை கடத்தி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக லண்டனில் இருந்து தமிழக, கேரள டிஜிபியிடம் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். கோவைப்புதூரை சேர்ந்தவர் சஞ்சய் குமார் ரெட்டி (46). இவர் நடிகர் அருண் விஜய்யை வைத்து சினம் காக்க மற்றும் நரகன், சினம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒளியும் ஒலியும் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசஸ் என்ற மலையாள திரைப்படத்தை தயாரித்தார்.

அந்த படத்தில் காலேஷ் ராமானந்த் என்பவர் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தை நீலேஷ் என்பவர் இயக்கி இருந்தார். மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு மே மாதம் நிறைவு பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நிறுவனத்தில் சஞ்சய் குமார் ரெட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில கடந்த ஜனவரி மாதம் சஞ்சய் குமார் ரெட்டி தனது மனைவி லாவண்யாவுடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.இதனால் சஞ்சய் குமார் ரெட்டி தனது திரைப்பட நிர்வாக பொறுப்புகளை அலுவலக மேனேஜராக பணிபுரிந்து வந்த தனது தம்பி ரமேஷிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும், 100 கிராம் எடையுள்ள 18 தங்க கட்டிகளை தனது தம்பி ரமேசின் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு கூறி இருந்தார். இந்நிலையில் லண்டனில் இருந்து சஞ்சய் குமார் ரெட்டி தனக்கு பணம் தேவைப்படுவதாக தம்பி ரமேசுக்கு போன் செய்து கேட்டுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் ரமேஷ் பணத்தை அனுப்பி வைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து ரமேசிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சஞ்சய் குமார் ரெட்டி தனது தம்பி ரமேஷ் நடவடிக்கைகள் குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தார்.

அப்போது ரமேஷ் வங்கி லாக்கரிலிருந்த 18 தங்க கட்டிகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப், வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும், சஞ்சய் குமார் ரெட்டி கையொப்பமிட்டு கொடுத்திருந்த ஆவணங்களை வைத்து விற்பனை செய்து இருந்தது அவருக்கு தெரியவந்தது. அதேபோல பொள்ளாச்சியில் உள்ள சஞ்சய் குமார் ரெட்டியின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 கிராம் தங்க நகைகளை ரமேஷ் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சஞ்சய் குமார் ரெட்டி சார்பில் பொள்ளாச்சி கோட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சஞ்சய் குமார் ரெட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக கொச்சியில் கொடுக்கப்பட்டிருந்த சினிமாவின் ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து விசாரித்தார். அப்போது சஞ்சய் குமார் ரெட்டி இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து பேசஸ் திரைப்படத்தை கோவை புதூரைச் சேர்ந்த சினிமா நிறுவனத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தம்பி ரமேஷ், திரைப்பட இயக்குனர் நீலேஷ், கொச்சியில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளை செய்த நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கோவை புதூரை சேர்ந்த முருகேசன் ஆகியோர் திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து இந்த பணிகளை செய்து இருந்ததை அவர் கண்டு பிடித்தார்.

இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி தமிழக போலீஸ் டிஜிபி, கேரள மாநில போலீஸ் டிஜிபி, சிபிஐ ஆகியோருக்கு புகார் அளித்தார். இதை தொடர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலரி வட்டம் போலீசார் திரைப்பட தயாரிப்பாளரின் போலியான இறப்பு சான்றிதழை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நீலேஷ், சாலச்சித்திரம் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ், கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த முருகேசன், திருச்சி மாவட்டம் பொன் மலையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கேரள தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மோசடி ஆசாமிகள் கேரள மாநிலம் எர்ணாகுளம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், லண்டனில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டி செல்போன் வாட்ஸ்அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. அதில், பேசிய நபர் தான் குனியமுத்தூர் போலீசில் இருந்து பேசுவதாகவும் உடனே அழைக்கும் படி கூறியிருந்தார். சிறிது நேரத்தில் அதே எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து சஞ்சய் குமார் ரெட்டி பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர் மரியாதையாக கேரளாவில் உள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் சஞ்சய் குமார் ரெட்டியின் மகளை கடத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் குமார் ரெட்டி தமிழக போலீஸ் டிஜிபி, கோவை மாவட்ட கலெக்டர், கேரளா டிஜிபி, பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேசன் ஆகியோருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். மேலும் சினிமா தயாரிப்பாளர் சஞ்சய் குமார் ரெட்டியை மர்ம நபர் மிரட்டும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் வங்கி லாக்கரிலிருந்த 18 தங்க கட்டிகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப், வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும், சஞ்சய் குமார் ரெட்டி கையொப்பமிட்டு கொடுத்திருந்த ஆவணங்களை வைத்து விற்பனை செய்து இருந்தது அவருக்கு தெரியவந்தது.