மதுரை: கனிம வளத்துறையில் போலி சலான் பரிவர்த்தனை முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த தினேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திறனாளி. பட்டப்படிப்பு முடித்துவிட்டு நீண்டநாளாக வேலை இல்லாமல் இருந்தேன். 2018ல் திண்டுக்கல் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராக சேர்ந்தேன். 2022ம் ஆண்டில் உதவி இயக்குனராக இருந்தவர், தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கினார்.
பின்னர் அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்யுமாறும், அதற்கு ஊதியம் தருவதாகவும் கூறினார். அவ்வாறு வேலை செய்தபோது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனரிடம் கொடுப்பேன். அப்போது போலி நடைச்சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது. அதற்கு நான் தான் காரணம் என உதவி இயக்குனர் கூறினார்.
இதனால் அவரது தூண்டுதலின்பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்ச பணத்தை என்னிடம் திரும்பக் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் நானும், எனது தாயாரும் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. குவாரி உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே எனக்கும், என் தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் புகார் குறித்து விசாரிக்க பொறுப்பான டிஎஸ்பியை மதுரை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி நியமிக்க வேண்டும். அவர், அம்பாத்துரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை கூடுதல் எஸ்பி கண்காணிக்க வேண்டும். இந்த விசாரணையில், தென் மாவட்டங்களில் உள்ள மற்ற கனிம வளத்துறை அலுவலகங்களிலும் போலியாக சலான் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் சொத்துக்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள், குறிப்பாக, சம்பந்தப்பட்ட உதவி கனிமவள அதிகாரி மற்றும் மனுதாரரின் சொத்துக்கள் குறித்து விசாரித்து, முறைகேடாக சொத்து சேர்ப்பு அல்லது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். இந்த விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பியிடம் பதிவுத் துறை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.