செங்கல்பட்டு: போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு எஸ்பி மற்றும் மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த சுப்புலட்சுமி, சந்தோஷ்குமார் மற்றும் சாதனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டை சேர்ந்த விவேகானந்தா என்பவர் கடந்த 1973ம் ஆண்டு வாங்கிய நிலத்தை அவரது உயிரிழப்புக்கு பின் அவரது வாரிசுகள் அனுபவித்து வந்தனர். வாரிசுகளில் ஒருவரான அனிதா, தனக்கான பங்கை 1988ம் ஆண்டு பிரித்து தனியாக பதிவு செய்தார்.
இதையடுத்து, மற்ற வாரிசுதாரர்களான 3 பேரில் சுப்புலட்சுமி மற்றும் சந்தோஷ் குமாருக்கு 20 சென்ட் இடம் பிரித்து வழங்கப்பட்டது. 3வது வாரிசான சாதானாவுக்கு எந்த பங்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், சரவணன் என்பவர் 2வது பங்குதாரரின் இடத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, வில்லங்கம் சரிபார்த்த போது போலியாக ஆதார் எண் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து மனுதாரர்கள் தரப்பில் மாவட்ட பதிவாளர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் எண்ணை சரிபார்க்குமாறு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை செய்த ஆணையம் ஆதார் எண் போலியானது என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, நீதிபதி, போலி ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவை செங்கல்பட்டு சார் பதிவாளர் ரத்து செய்ய வேண்டும். ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு எதிராக மாவட்ட எஸ்பியிடம் சார் பதிவாளர் புகார் அளிக்க வேண்டும். போலி ஆதார் எண் மோசடி குறித்து காவல்துறை விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.