ஒரே பெண்ணுடன் இருவர் கள்ளத்தொடர்பு; நண்பரின் மர்ம உறுப்பை அறுத்து கண்ணை தோண்டி கொல்ல முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரின் மர்ம உறுப்பை அறுத்து, கண்ணை தோண்டி எடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(45), கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. வேலைக்கு செல்லும்போது இருவேல்பட்டை சேர்ந்த அன்பு (எ) சரத்குமார்(39) என்பவரிடம் நட்பு ஏற்பட்டு ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் தலை, முகத்தில் ரத்த காயங்கள் மற்றும் மர்ம உறுப்பில் ஒரு விதை அறுக்கப்பட்டும், வலது கண் தோண்டி எடுக்கப்பட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
சங்கர் தனது மனைவி அஞ்சுலட்சத்தை பிரிந்து வசித்து வருகிறார். சொந்த ஊரான மரகதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தார். நண்பரான அன்புவும் அந்த பெண்ணுடன் அறிமுகமாகி தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அன்பு வந்த பிறகு சங்கரை அந்த பெண் கண்டுகொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் கள்ளக்காதலிக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அன்புவிடம் அந்த பெண் கூறி வந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து நேற்று முன்தினம் மதுபோதையில் சங்கரிடம் கேட்டபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவத்தை அன்பு செய்துள்ளார் என்றனர்.
இதுகுறித்து சங்கர் மனைவி அஞ்சுலட்சம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அன்பு (எ) சரத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கள்ளக்காதலியாக இருந்த பெண்ணிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.