கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றபோது குறி தவறியதால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ளது மேல் மதூர் கிராமம். இந்த கிராமத்தில் அண்ணாமலை என்பவர் நேற்று இரவு அவரது வீட்டில் மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வீட்டில் வளர்த்து வந்த கோழியை சுட்டுள்ளார்.
அப்போது, துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டானது குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையில் பாய்ந்தது. இதில், பிரகாஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கரியாலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வராயன் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியின் மூலம் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.