நியாயமான கட்டணம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வரையில் தனியார் பல்கலை சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற கூடாது: தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தனியார் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும். ஏற்கனவே தாங்கள் விரும்பிய கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் பல மடங்கு கட்டணங்களை உயர்த்தும் சூழல் உருவாகும்.
மேலும் கல்வியின் தரத்தையும், அனைவருக்குமான இடஒதுக்கீட்டையும் உறுதி செய்ய வேண்டிய அரசு தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிப்பது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதகமாக அமையும். ஆகவே நியாயமான கட்டணத்தையும், கல்வித் தரத்தையும் அனைவருக்குமான இடஒதுக்கீட்டையும் உறுதி செய்யும் வகையிலான திருத்தங்களை இந்த சட்டத்தில் கொண்டு வரும் வரை இந்த சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்ற கூடாது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பாகிஸ்தானை உருவாக்கிய இந்தியாவுக்கு அதை இவ்வாறும் செய்ய முடியும்’’ என சங்கேத மொழியில் பேசி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அதே போன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார், தேவையற்ற சண்டைக்கு அண்டை நாடுகளை அழைப்பது பீஹார் தேர்தலுக்காக செய்யப்படும் உள்ளடி வேலையாக பார்க்கப்படுகிறது.