கோவை: ‘வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, நேர்மையான தேர்தல் நடக்க எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது’ என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவும் கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (இன்று) நடைபெறும் மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் வருகிறார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறோம். பீகார் மாநிலத்தில் மக்களின் வரவேற்போடு எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டு, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் பல தொகுதிகளில் ஏராளமான போலி வாக்காளர்கள் உள்ளனர். இரட்டை வாக்காளர்கள் இருப்பதாக மதிமுக தலைவர் வைகோ கூறுகிறார். இந்த குளறுபடிகளை சரி செய்து நேர்மையான தேர்தல் நடைபெறவே தேர்தல் ஆணையம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாஜ ஆளும் மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


