அமராவதி: ஆந்திரா, அமராவதியில் 75 வயதில் இந்தியாவும், வாழும் இந்திய அரசியலமைப்பும் என்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பேசுகையில்,‘‘ இட ஒதுக்கீடு என்று வரும் போது ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தைகளை ஏழை விவசாய தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிடக்கூடாது. கடந்த 1992ல் இந்திரா சாஹனி வழக்கில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தவர்களை(கிரீமி லேயர்) அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிக்கிறேன்.
அதே கிரீமீ லேயர் நடைமுறை தலித் இடஒதுக்கீட்டுக்கும் பொருந்த வேண்டும் என்ற கருத்தை கூறினேன். இருப்பினும் அந்த பிரச்னையில் எனது தீர்ப்பு பரவலாக விமர்சிக்கப்பட்டது. நீதிபதிகள் வழக்கமாக தங்கள் தீர்ப்புகளை நியாயப்படுத்தக் கூடாது என்று நான் இன்னும் கருதுகிறேன், மேலும் எனக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஓரிரு நாட்களில் தலைமை நீதிபதியாக பயணத்தை முடிக்கத் தயாராக இருப்பதற்கு முன்பு, நான் கலந்து கொண்ட கடைசி விழா ஆந்திராவின் அமராவதியில் நடந்தது.
தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு கலந்து கொண்ட முதல் விழா மகாராஷ்டிராவில் உள்ள என் சொந்த ஊரான அமராவதியில் நடந்தது’’ என்று கூறினார். 2024ம் ஆண்டு நீதிபதி கவாய் பேசுகையில், மாநிலங்கள் தலித்து மற்றும் பட்டியல் பழங்குடியினர் மத்தியிலும் கிரீமி லேயரை அடையாளம் காண ஒரு கொள்கையை உருவாக்கி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலனை மறுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


