பேஸ்புக், யூடியூப் தடையை எதிர்த்து போராட்டம் நேபாளத்தில் வன்முறை வெடித்தது: 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா
* நாடாளுமன்ற வளாகத்தை தீவைத்து கொளுத்தினர்
* ராணுவம் குவிப்பு ஊரடங்கு உத்தரவு அமல்
காத்மாண்டு: நேபாளத்தில் பேஸ்புக், யூடியூப் தடையை எதிர்த்து நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19பேர் பலியானார்கள். நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள நாட்டில் உள்ள சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
இத்தகைய இணையதளங்கள் நேபாள நாட்டு சட்டப்படி பதிவு செய்ய ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் உரிய நிபந்தனைகள்படி பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப் உள்பட 26 சமூக ஊடகங்கள் செப்.4ஆம் தேதி முதல் நேபாள நாட்டில் தடை செய்யப்பட்டன. இந்த இணையதளங்கள் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்படும் வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நேபாள ஜென் இசட் தலைமுறைைய சேர்ந்த இளைஞர்கள் நேற்று நாடு முழுவதும் இணையதள தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தடையை மீறி மத்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்புகைக்குண்டு வீசப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் கம்புகள்,கற்கள், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து பதில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் மூலம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறை மோதல்களில் 12 வயது சிறுவன் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசின் நடவடிக்கையால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறி நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததை அடுத்து நேபாள தலைநகரில் ராணுவம் குவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான வாயில்களை உடைத்து, உள்ளே நுழைந்து, நுழைவாயிலுக்கு தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றம் உருவானது. நேபாள தலைநகர் காத்மாண்டு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
முதலில் பனேஷ்வர் பகுதியில் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதியின் இல்லம் (ஷிதல் நிவாஸ்), லைன்சௌரில் உள்ள துணை ஜனாதிபதியின் இல்லம், மகாராஜ்கஞ்ச், சிங்கா தர்பார் வீதிகள், பாலுவாதரில் உள்ள பிரதமரின் இல்லம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் போன்ற பல உயர் பாதுகாப்பு பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இங்கு பொதுமக்கள் நுழையவோ அல்லது போராட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டது.
இதே போல் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாக்கில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது.
இதே போல் பனேஷ்வர், சிங்கதர்பார், நாராயண்ஹிட்டி,பிரத்நகர், போகாரா, நேபாள்கஞ்ச், புட்வால், சன்சாரி மற்றும் சித்வான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் பரவியுள்ளன. போகாராவில், உள்ளூர் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர், அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முதல்வர் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் நேபாளம் முழுவதும் பதற்றம் உருவாகி உள்ளது. நேபாள அரசுக்கு எதிராக மக்கள் போராடுவதில் பல இடங்களில் வன்முறை வெடித்து, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய கொடிய போராட்டங்களைத் தொடர்ந்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, அமைச்சர் தனது முடிவை அறிவித்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* ஏன் போராட்டம்?
நேபாளத்தில், பேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களை அரசாங்கம் 26 பதிவு செய்யப்படாத தளங்களைத் தடுத்ததைத் தொடர்ந்து செப்.5 முதல் இணையதளங்கள் செயல்படவில்லை. இதனால் பயனர்கள் கோபமும் குழப்பமும் அடைந்தனர். இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற பிரபலமான தளங்களில், பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் வணிகத்திற்காக நேபாளத்தில் லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர். நேபாள அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே கோபத்தை தூண்டியது. ஆயிரக்கணக்கான ஜென் இசட் தலைமுறை ஆர்ப்பாட்டக்காரர்கள் காத்மாண்டுவில் அணிவகுத்துச் சென்றனர். அப்போது இணையதள தடை மட்டுமல்லாமல் நேபாளத்தில் நிறுவன மயமாக்கப்பட்டுள்ள ஊழலுக்கு எதிராகவும், நேபாள அரசின் சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிராகவும் போராடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
* நேபாளத்தில் பேஸ்புக் பயனர்கள் 1.35 கோடி
* இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கை 36 லட்சம்
* அவசர அமைச்சரவை கூட்டம்
பொதுமக்கள் போராட்டம் தொடர்பாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் இணையதள தடையை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
* பிரதமர் ராஜினாமா செய்வாரா?
நேபாளம் முழுவதும் போராட்டம் வெடித்ததால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சிகளான சி.பி.என் (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் சி.பி.என் (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) ஆகியவை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
* ஜென் இசட் தலைமுறையினர் யார்?
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர்.
* எதற்காக இணைய தடை?
நேபாளத்தில் இணையதளம் மூலம் ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்தது. இதுதொடர்பான வழக்கில் நேபாள நீதிமன்றம் இணையதளங்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை நேபாள நாட்டு சட்டப்படி இணையதளங்கள் பதிவு செய்ய கெடு விதித்தது. முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் டெலிகிராம் செயலிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. நேபாள விதிமுறைகளுக்கு இணங்க டிக்டக் தளம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் டிக்டாக் மீதான ஒன்பது மாத தடையை நேபாள அரசு நீக்கியது. ஆனால் மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (முன்னர் டிவிட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட 26 இணையதளங்கள் காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட 26 தளங்கள் தடை செய்யப்பட்டன. டிக்டாக், வைபர், விட்க், நிம்பஸ், போபோ லைவ் ஆகியவை நேபாள அரசு சட்டப்படி பதிவு செய்யப்பட்டதால் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. டெலிகிராம் மற்றும் குளோபல் டைரியின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
* ‘அராஜகவாதிகள்’ அமைச்சர் ஆவேசம்
நேபாள அரசாங்க செய்தித் தொடர்பாளரும் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிருத்வி சுப்பா குருங் கூறுகையில்,’ நேபாள அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் நடந்து வரும் போராட்டங்கள் அராஜகவாதிகள் மற்றும் பிற்போக்கு சக்திகளால் நடத்தப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட சமூக ஊடக தளங்களை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைகளை மையமாகக் கொண்ட ஆர்ப்பாட்டங்கள், பாராளுமன்றம் மற்றும் சிங்கா தர்பார் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மீதான தாக்குதல்களுடன் வன்முறையாக மாறியுள்ளது’ என்றார்.
* போராட்டத்தை ஏற்பாடு செய்தது யார்?
நேபாளத்தில் நடக்கும் போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய நிறுவனம் ‘ஹாமி நேபாளம்’ என்ற அரசு சாரா நிறுவனம். 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹாமி நேபாளம், வெள்ளம் மற்றும் பூகம்பங்களைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள், உணவு விநியோகம் மற்றும் நீர் விநியோகத்தை மீட்டெடுப்பது போன்ற பேரிடர் நிவாரண முயற்சிகள் உள்ளிட்ட மனிதாபிமானப் பணிகளை செய்து வந்தது. இந்த அமைப்புக்கு அரசியல் செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் சமீபத்திய நாட்களில், நேபாளத்தில் தற்போது தடைசெய்யப்பட்ட தளமான அதன் டிஸ்கார்ட் சேனல்களில் ஆன்லைன் அழைப்புகள் மூலம் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவைத் திரட்டத் தொடங்கியது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிஸ்கார்ட் போன்ற பயன்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க, எதிர்ப்பாளர்கள் தொடர்பில் இருக்கவும் தங்கள் செயல்களை ஒருங்கிணைக்கவும் விபிஎன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.