Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எந்த வாரண்டும் இல்லாமல் பேஸ்புக், எக்ஸ், இ-மெயிலை கூட அணுகலாம்: அந்தரங்கத்துக்கும் வேட்டுவைக்கும் ஐடி மசோதா; வருமான வரித்துறைக்கு எல்லையற்ற அதிகாரம்

* அத்துமீறும் விதிகளை எதிர்க்கும் நிபுணர்கள்

ஐடி ரெய்டு… சில சமயங்களில் ஈர்க்கக்கூடிய செய்தியாகவும், பல சமயம் கடந்து போகிற விஷயமாகவும் இருக்கும். காரணம், நம் வீட்டுக் கதவை ஐடி தட்டக்கூடிய சாத்தியமே இல்லை என்கிற நிம்மதிதான். மாதச்சம்பளதாரர்கள் ஒரு போதும் ஐடியில் இருந்து தப்புவதில்லை. சம்பாதிப்பதற்கு ஏற்ப வரி டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது. பாதி செலவுகள் கடன் இஎம்ஐ அல்லது கிரெடிட் கார்டு தான். இவ்வளவுக்குப் பிறகும் ஐடி துறைக்கு நம்மிடம் என்ன வேலை இருக்கிறது என்ற பலரின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது புதிய வருமான வரி மசோதா.

வரி வசூல் ஒன்றே இலக்காகக் கொண்டு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், வரி வருவாயை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பானி பூரி, சமோசா விற்பவருக்கு கூட ஐடி நோட்டீஸ் பறக்கிறது. அதிக விலைக்கு பொருட்கள் வாங்கினாலும் கேள்வி நிச்சயம். இதனால், வரி வருவாய் ஆதாரங்கள் ஒன்றிய அரசுக்குப் பெருகிக் கொண்டே போகிறது. இதன் அடுத்த அத்தியாயம்தான், வருமான வரிச்சட்ட திருத்தம் என்கிறார்கள். ஒன்றிய அரசு செயல்படுத்த உள்ள வருமான வரிச்சட்ட திருத்த மசோதாவில் உள்ள பிரிவுகள், ஐடி நோட்டீசில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்பெல்லாம் சந்தேகத்துக்கு இடமான அதிக பரிவர்த்தனைகள் போன்றவைதான் நோட்டீஸ் வர காரணமாக இருக்கும். ஆதரங்களுடன் வாரண்ட் பெற்று வந்துதான் ஐடி அதிகாரிகள் வீட்டுக் கதவை தட்டுவார்கள். லாக்கர், அலமாரி எதை வேண்டுமானாலும் உடைத்து சோதனையிடலாம். சந்தேகம் ஏற்பட்டால் எந்த கட்டிடத்துக்குள்ளும் சென்று சோதனை நடத்தலாம் என்ற அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆனால், ஐடி மசோதாவில் உள்ள 247வது பிரிவு, வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை அளித்திருக்கிறது.

அதாவது, எந்த ஒரு வாரண்டும் இல்லாமலேயே நீங்கள் பயன்படுத்தும் கணினி, பேஸ்புக், எக்ஸ், போன்ற சமூக வலைதள கணக்குகள், இ-மெயில் என அனைத்தையும் அணுகக்கூடிய அதிகாரத்தை ஐடி துறைக்கு அளிக்கிறது இந்தப்பிரிவு. வரி வசூலை அதிகரிக்க வேண்டும், யாரும் ஐடி பார்வையில் இருந்து தப்பி விடக்கூடாது என்பது இதன் நோக்கமாக கருதப்பட்டாலும் கூட, தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்பதை எந்த விதத்திலும் மறுக்க முடியாது என்கின்றனர் விமர்சகர்கள். வருமான தணிக்கையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியோரும் இந்த கருத்தையே வழி மொழிகிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள அடிப்படை தனியுரிமையை பறிக்கும் செயல் என்று பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘சட்டப்பிரிவு 19 (1) (ஏ) பேச்சுரிமையை வரையறை செய்கிறது. ஆனால் மசோதாவில் உள்ள விஷயங்கள் இதற்கு நேரெதிராக இருக்கின்றன. சமூக வலைதளங்கள் பேச்சுரிமை, கருத்துரிமைக்கான களங்களாக இருக்கின்றன. மேலும், இரு தனிப்பட்ட சமூக வலைதள நண்பர்களுடன் அந்தரங்க உரையாடல்களும் நடக்கின்றன. புதிய மசோதா இதற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது’’ என்றார்.

எந்தெந்த கணக்குகளை அணுக அதிகாரம்?

1. இ-மெயில் சர்வர்கள்.

2. சமூக வலைதள கணக்குகள்

3. ஆன்லைன் முதலீட்டு கணக்கு, பங்கு பரிவர்த்னை, வங்கி கணக்குகள்.

4. சொத்து தொடர்பான ஆவணங்கள் சேமித்துவைக்கக்கூடிய இணையதள கணக்குகள்.

5. தனிநபர் விவரங்கள் உள்ள டிஜிட்டல் தளங்கள் மற்றும் அதுபோன்ற அனைத்து வகையான இணைய கணக்குகள், தளங்கள்.

யார் யாருக்கு அதிகாரம்?

1. இணை இயக்குநர் அல்லது கூடுதல் இயக்குநர்.

2. இணைக் கமிஷனர் அல்லது கூடுதல் கமிஷனர்

3. உதவி இயக்குநர் அல்லது துணை இயக்குநர்

4. உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர்

5. வருமான வரி அதிகாரி அல்லது வரி வசூல் அதிகாரி

* 10 ஆண்டில் 112 ரெய்டுகள் 8 ஆண்டில் 3000க்கு மேல்

ஒன்றிய பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து வருமான வரி ரெய்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், மிரட்டல், பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காகவும் ஐடி, சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல ரெய்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதொடர்பான புள்ளி விவரங்களும் அதிகம் வெளியிடப்படுவதில்லை. இருப்பினும் காங்கிரஸ் எம்பியின் கேள்விக்கு பதில் அளித்து நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அளித்த புள்ளி விவரத்தின்படி, 2004 ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 112 ஐடி ரெய்டுகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு 8 ஆண்டுகளில் 3,010 ஐடி ரெய்டுகள் நடத்தப்பட்டு ரூ.99,356 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோல் கடந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் 2022-23 நிதியாண்டுடன் முடிந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,980 ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.