Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்களுக்குக் கீழ் வீக்கமா…கவலையை விடுங்க!

கண்களின் ஒளியும், அதன் பிரகாசமும் முக அழகுக்கு மிக அவசியம். நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத் தான் பார்க்கிறார்கள். சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் அல்லது பை போல் இருக்கும். சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவராகவும், உடல் நலமில்லாதவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்குக் காட்டி விடும். இதற்கு என்ன காரணம், தீர்வுகள் என்ன?

கண்ணுக்குக் கீழ் ஏன் வீக்கம் ஏற்படுகிறது?

* பரம்பரை வழியில் சிலருக்கு கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படும். பெற்றோருக்கு அப்படி இருந்தால், பிள்ளைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் அப்படி ஏற்படக் கூடும். இன்னும் சிலருக்கு முதுமையை அடையும் போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள்போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.

* கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடியவை. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.

* சில நேரங்களில் வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறுகளுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அரிப்பு, வறண்ட சருமம், வீங்கிய கால்கள் மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது. நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

*கல்லீரல் நோய்களும் சிலருக்குக் கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கண் வீக்கத்தோடு தூக்கமின்மை, வறண்ட வாய், கண்கள், வயிற்றுவலி, கிறுகிறுப்பு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கண்களுக்குக் கீழ் வீக்கம் வராமல் பாதுகாக்க வழிமுறைகள்

ஆழ்ந்த உறக்கம் அவசியம். ஆழ்ந்த தூக்கம்தான் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும். தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிச் சூழல், வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபடும். ஆனால், ஒருவர் நாள் ஒன்றுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம். தினமும் தூங்குவதற்கான நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே தூங்க முயற்சிக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுவது, புத்தகம் படிப்பது போன்றவை நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

உப்பில் கவனம்

உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைக்கக்கூடும். பொதுவாகவே நம் உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது பழக்கமாகிவிட்டது. ஆனால்,ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கிராம் உப்பை மட்டும்தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் கண்ணின் வீக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

ஈரத்துணி உதவும்

கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை 10-20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். குளிர்ச்சியான தட்பவெப்பநிலை வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்குக் கீழ் வைக்கலாம்.

வெள்ளரிக்காய் மகிமை

வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணின் வீக்கத்துக்குப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை ஃபிரிட்ஜில் வைத்து அதை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். வெள்ளரிக்காயில் இருக்கும் கேஃபின் அமிலம் (Caffeic acid) மற்றும் ஆஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) கண்ணின் கீழ் சேரும் நீர்த்தேக்கத்தைக் குறைக்கும். வறண்ட சருமத்தைப் போக்கும். கண்ணுக்குக் கீழ் கருவளையம் இருந்தாலும் சரியாகிவிடும்.

தேநீர்ப் பை காக்கும்

தேநீரில் இருக்கும் டேனின்ஸ் (Tannins) இயற்கையாகவே சுருங்கும் தன்மை கொண்டது. கண்ணின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைத்திருந்தாலும் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சில நாட்களில் போய்விடும்.

வீக்கத்தை விரட்டுமே உயரமான தலையணை

தலையை நேராக வைத்துப் படுப்பதால், புவி ஈர்ப்பு விசையில் அதிகத் தண்ணீர் கண்ணில் தேங்கிவிடும். அதனால், தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு தூங்குவது நல்லது. உயரமான தலையணை வைத்துத் தூங்கினால், காலையில் வீங்கிய கண்களுடன் கண்விழிக்க வேண்டியது இருக்காது.

அலர்ஜி

அலர்ஜிகளும் கண் வீக்கத்துக்கு முக்கியமான காரணங்கள். முடிந்தவரை அலர்ஜிகள் ஏற்படுத்தும் மகரந்தம், பூஞ்சை ஆகிய பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவர்கள் அலர்ஜிக்கு மருந்துகளும் கொடுப்பார்கள். அவற்றையும் பயன்படுத்தலாம். அதிக நேரம் சமையலறையிலேயே இருக்கும் பெண்கள் உடல் சூடு காரணத்தால் கூட கண்களில் அரிப்பு, அதைச் சார்ந்த சுருக்கம், பை பிரச்னைகளை சந்திப்பர். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்க தீர்வு கிடைக்கும். இந்த வழிகளைக் கடைப்பிடித்தால், கண்ணின் வீக்கம் குறைந்து அழகான, பளிச்சிடும் கண்களைப் பெறலாம். முகமும் மலர்ச்சியோடு காணப்படும்.

- எஸ். ரமணி.