Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் வந்த வினை: 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு

போபால்: தீபாவளி பண்டிகை கடந்த 20ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்று உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. ரூ.150 முதல் ரூ.200 வரை விலையுடைய அந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது பெரும் வெடி சத்தத்துடன் அசிட்டிலின் என்ற வாயு வெளியாகிறது. இந்த புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் போபால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அசிட்டிலின் வாயுவை சுவாசிக்கும்போது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் நியாபக மறதி உள்ளிட்ட ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். போபாலில் விற்பனை செய்யப்பட்டது சாதாரண பட்டாசு அல்ல, அது ஒரு ரசாயன வெடிகுண்டு என்று போபால் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ஹேமலதா யாதவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பட்டாசு விற்பனை சந்தைகளில் அதிரடி சோதனை நடத்தி, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.