Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்சகட்ட குழப்பம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே நடக்கும் பதவி பனிப்போர் தற்போது ஆதரவாளர்கள் பக்கம் பரவி இருக்கிறது. இருவரும் டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்தனர். இருவருக்கும் இடையே பஞ்சாயத்து நடந்த போதிலும் ஆதரவாளர்கள் இப்பிரச்னையை விடுவதாக தெரியவில்லை.

வாக்கு திருட்டு குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தீவிர பிரசாரம் செய்துவரும் நிலையில் கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா அதை விமர்சனம் செய்தது காங்கிரசில் அதிருப்தி அலை உருவானது. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டது. அதே சமயம் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜ ஆதரவாளர் என்பதை காட்டிக்கொள்ளும் வகையில் சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய டி.கே.சிவகுமாரை பதவி நீக்கம் செய்வார்களா என்று கேள்வி எழுப்பினர்.

அதே போல் விழா ஒன்றில் பேசிய முதல்வர் சித்தராமையா, 1991ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு மோசடியால் நான் தோல்வி அடைந்தேன் என்று குற்றம்சாட்டினார். அப்போது சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து வெற்றி பெற்றது காங்கிரஸ் வேட்பாளர். எனவே காங்கிரஸ் தான் வாக்கு திருட்டில் ஈடுபட்டது என்பதை சித்தராமையாவே ஏற்றுக்கொண்டுள்ளார் என்று விமர்சித்த எதிர்க்கட்சியான பாஜ, இதே ேபால் வாக்கு திருட்டு பிரசாரத்தை விமர்சித்த கே.என்.ராஜண்ணா தாழ்த்தப்பட்டவர் என்பதால் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், கே.என்.ராஜண்ணாவின் பதவி பறிப்பு சித்தராமையா தரப்புக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. தற்போது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரான எம்எல்ஏ எச்.சி.பாலகிருஷ்ணா, ‘அமைச்சர் பதவியை இழந்ததால் அதிருப்தியில் உள்ள ராஜண்ணா, பாஜவில் சேர விண்ணப்பித்துள்ளார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ராஜண்ணாவின் மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான ராஜேந்திர ராஜண்ணா, ‘அதிகாரத்திற்காகவும், முதல்வர் பதவியை அடைவதற்காகவும் உங்கள் தலைவர் டி.கே.சிவக்குமாருடன் சேர்ந்து கட்சி மாறத் தயாராக இருக்கும் குழுவில் பாலகிருஷ்ணாவும் உள்ளார். என் தந்தையின் பதவிப் பறிப்புக்குப் பின்னணியில் சூழ்ச்சி இருக்கிறது. என் தந்தை ஒருபோதும் சட்டப்பேரவையில் பாஜவின் வழிகாட்டி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலைப் பாடியவர் அல்ல; அவருக்குத் தனிச் சித்தாந்தம் உண்டு’ என்று கூறி, டி.கே.சிவக்குமாரை மறைமுகமாக சாடினார்.

இதற்கிடையில் கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நிலம் தரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வரை தர வேண்டும் என்று அமைச்சர் திம்மாபுரா கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஒரு கேபினட் அமைச்சர் இப்படி பேசலாமா?. இதற்கு முன்னர் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது இதற்கென ஒரு தொகையை நிர்ணயித்து வைத்துள்ளார். அதன்படி செயல்பட வேண்டும் என்றார். இதனால் அமைச்சருக்கும்-டி.கே.சிவகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படி தலைவர்களின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வது, கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.