அருமனை : குமரி மாவட்டத்தில் பத்துக்காணி, ஆறுகாணி, களியல், சீலோன்காலனி, செண்பக தரிசு உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் பத்துக்காணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து வசூல் வேட்டை நடத்தி உள்ளனர். பணம் தராத மக்களிடம் பொருள் உதவி கேட்டுள்ளனர். எதுவும் தர முடியாது என்றவர்களை மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த பகுதிகளில் உள்ள டீ கடைகளிலும் அமர்ந்து டீ குடித்ததுடன், மக்களுடன் பேசி சென்றுள்ளனர். இதை மலையோர கிராம மக்கள் சிலர் உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்கள் நக்சல்களாக இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மூலம் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் உள்பட உளவு பிரிவு போலீசார் விரைந்து சென்று பத்துக்காணியில் விசாரணை நடத்தி உள்ளனர். சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும், மலையோர கிராமங்களில் தீவிரவாத ஒழிப்பு படை மூலம் சோதனையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.