எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிப்பு: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிக்கப்படுகிறது என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. அதை தொடர்ந்து மாணவர்கள் நேற்று மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் நாளை வரை மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு நீட்டிக்கப்படுகிறது.
மாணவர்கள் நாளை காலை 11 மணி வரை விருப்பமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதனை தொடர்ந்து 7ம் தேதி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 8ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் இட ஒதுக்கீட்டு ஆணையை ஆகஸ்ட் 8ம் முதல் 13ம் தேதி நண்பகல் 12.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசு நிர்ணயம் செய்து கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.