Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எக்ஸ்பிரஸ் ரயில்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு 14 பெட்டிகளை கடந்து செல்வதால் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகள்: பொது பயணிகள் ஆக்கிரமிப்பு

சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெட்டி, டிரைவர் இருக்கும் இன்ஜின் அருகே இருப்பதால், வெகுதூரம் நடந்து செல்ல கடும் சிரமம் அடைகின்றனர். ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பெட்டி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபர், அவரது பாதுகாவலர் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. மற்ற நபர்கள் பயணம் செய்ய அனுமதியில்லை. மீறி பயணித்தால், புகார் தெரிவிக்க (9962500500) செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தவேளையில், கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைவருக்கும் முற்றிலுமாக சலுகை கட்டணம் நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சமூக அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பேரில், ரயில்வே நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்தது. ஆனால், ரயில் நிலையங்களுக்கு சென்றால், அங்குள்ள நடைமேடையை அடைந்து, பயணிகள் செல்ல வேண்டிய ரயிலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெட்டியை தேடி கண்டு பிடிப்பது கடும் சிரமமாக உள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகள் தவிர, மற்ற நபர்களும் பயணம் செய்கின்றனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி மதி என்பவர் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பு, நாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கான ரயில் உள்ள பிளாட் பாரத்துக்கு சென்றால் அந்த ரயிலின் கடைசியில் உள்ள லக்கேஜ் பெட்டியின் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இருந்தது. இதனால், நாங்கள் வெகு தூரம் நடந்து செல்ல தேவையில்லை. இப்போது டிரைவர் உள்ள இன்ஜின் அருகே அந்த பெட்டி மாற்றப்பட்டுள்ளது. இதனால், முன்பதிவு செய்யாத (முன்புறம் மற்றும் பின்புறம்) தலா 2 பெட்டிகள், 2 ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்த சுமார் 10 பெட்டிகளை கடந்து கடை கோடிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

நான் கடந்த அக்.26ம் தேதி, சென்னையில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், பெங்களுருக்கு சென்றேன். ரயில் புறப்படும் முன் அரை மணிநேரம் முன்னதாக சென்றாலும், ரயிலில் பயணம் செய்ய வருபவர்கள் அவர்களை வழியனுப்ப வருபவர்களின் கூட்டத்தை கடந்து செல்வது பெரும் சவாலாகவே உள்ளது. அப்படியும் சலிப்புடன் கடந்து சென்றால், மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் சம்பந்தம் இல்லாதவர்கள் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்காமல் அடம் பிடிக்கிறார்கள். இதனால் மாற்றுத்திறானளிகள், பெட்டியில் உள்ள ரயில்வே போலீசாரின் உதவி (9962500500) எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் கேட்கும் கேள்விகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

‘‘நீங்கள் ஏன் அந்த பெட்டியில் ஏறுகிறீர்கள். அது பொது பெட்டி. அதில், அனைவரும் பயணம் செய்யலாம்’’ என கூறுகிறார்கள். பிறகு, அது மாற்றுத்திறனாளிகள் பெட்டி என்பதை வெளியே எழுதி வைத்திருக்கிறார்கள். அதன்படி அதில், ஏறி பயணம் செய்கிறோம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அடுத்த ரயில் நிலையத்தில் (ஜோலார்பேட்டை), போலீசாரை அனுப்பி விசாரிக்கலாம் என கேட்டு கொண்டேன். ஆனாலும், எதிர் முனையில் பேசியவர் எஸ்எல்ஆர் டி (SLRD) என்ற பெட்டியில் யார் வேண்டுமானாலும் ஏறலாம். அதை யாரும் தடுக்க முடியாது என கூறிவிட்டார்.

இதையடுத்து, அந்த பெட்டியில் இருந்த மற்ற மாற்றுத்திறனாளி பயணிகளும், தொடர்ந்து அதே எண்ணை தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்த பின்னர், ஜோலார்பேட்டையில், ரயில்வே போலீசார் வந்து சோதனை நடத்தி, சிலரை இறக்கினர். அதற்குள் ரயில் புறப்பட்டதால், மற்றவர்களை இறக்க முடியவில்லை. அதனால் அவர்கள், அதே ரயிலில் கடைசி வரை பயணம் செய்தனர்.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில், போலீஸ்காரர்கள் பலர் பயணம் செய்கிறார்கள். ஆனால், அவர்களே யாரையும் தட்டிக் கேட்பதில்லை. அப்படி கேட்டால், ரயில்வே போலீசார் வந்து, அவர்களையும் இறக்கிவிடுவார்கள் என்பதால், கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அதுவே வேதனையாக உள்ளது என்றார்.

* பேட்டரி காருக்கு பணம் வசூல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய வரும் முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச சேவையாக பேட்டரி கார்கள் செயல்படுகின்றன. இதனை பெரும்பாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குகின்றனர். அவர்கள் நடைமேடையின் முன் பகுதியில் இருந்து, அவரவர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியின் அருகில் அழைத்து சென்று விடுகிறார்கள்.

ஆனால், அவர்கள் அந்த வாகனத்தில் இருந்து இறக்கியவுடன் ஷேர் ஆட்டோவை போல ஒரு நபருக்கு ரூ.10 என வசூல் செய்கிறார்கள். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். அதிலும் ரயில்வே துறை இலவசம் என அறிவித்துள்ளதை, கட்டணமாக வசூலிப்பர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

* 10 ஆண்டுக்கு முன் தினகரன் செய்தியால் நடந்த போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய சிலர் அத்துமீறலில் நடந்து கொண்டனர். அப்போது, அதுபற்றிய செய்தி, தினகரன் நாளிதழில் வந்தது. அந்த செய்தியை மையமாக வைத்து, பல்வேறு மாற்றுத்திறனாளிகள் ரயில்வே அலுவலகம் முன்பு, கொட்டும் மழையில் 3 நாட்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர், அந்த பெட்டியில், சாதாரண நபர்கள் பயணம் செய்யாதபடி, ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். நாளடைவில், அந்த கண்காணிப்பு மறைந்துவிட்டது. எனவே மீண்டும் கண்காணிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.