அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடுகள்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26-ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து பேசியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து இயற்கை எய்திய, ஓய்வு பெற்ற மற்றும் தன்விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்க முன்பணமாக ரூ.1,137.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது.
கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2025-26ம் ஆண்டில் பெறப்பட்ட உதவித் தொகை ரூ.522.34 கோடியை மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 3 ஆயிரம் புதிய பி.எஸ்-6 வகை பஸ்களை 2025-26ம் ஆண்டில் வாங்குவதற்காக பங்கு மூலதன உதவியாக ரூ.471.53 கோடியை கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது.
2025-26-ம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கூடுதல் தொகை ரூ.469.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் ரூ. 2,914.99 கோடி நிதிக்கான துணை மதிப்பீடுகளை ஏற்று இசைவளிக்க வேண்டும்.