மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்திற்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை துவங்குகிறது. 121 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 122 தொகுதிகளில் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதற்காக 38,472 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2.3 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மற்ற மாநிலங்களை விட பீகார் மாநில தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்நோக்கி உள்ளது. காரணம், எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்.
இந்தியாவிலேயே பீகார் மாநிலத்தில்தான் முதன்முதலாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பதுபோல, அதிரடியாக 65 லட்சம் வாக்காளர்கள் பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்டனர். இதற்கு இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், ஒருவரே பல ஓட்டுரிமைகளை கொண்டவர்கள் என்பது உட்பட பல காரணங்கள் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டன. ‘இது தேர்தல் ஆணையம் பாஜவுடன் கை கோர்த்து நடத்தும் வாக்கு திருட்டு’ என பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார் ராகுல் காந்தி. மேலும், திமுக, திரிணமுல் காங் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், எஸ்ஐஆருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
ஆர்ஜேடியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், சட்டப்பேரவை நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் முதன்முதலாக எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டது ஏன்? இது பாஜவுக்கு எதிராக வாக்களிப்போரை முடக்கும் முயற்சி. பீகார் தேர்தல் முடிவை இது முன்கூட்டியே திட்டமிடும் செயல். வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில், அவசரம் அவசரமாக ஏன் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என பல கேள்விகளை கேட்டிருந்தார். ‘தேர்தலுக்கு முன், பின் என்பதல்ல விஷயம். இது போலி வாக்காளர்களை நீக்குவதற்கான கடும் முயற்சி. இது வாக்கு திருட்டு நடைபெறுவதற்காக அல்ல. சில கட்சிகள் தேவையற்ற பிரச்னையை கொண்டு வருகின்றன’ என தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தற்போது மேலும், 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நேற்று முன்தினம் முதல் துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளே படிவத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. பல இடங்கள் புரியவில்லை. தேர்தல் நேரத்தில் தேவையற்ற வேலை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார். கூட்டத்தின் முடிவின்படி, திமுக சார்பில் எஸ்ஐஆர் பணிகளை தமிழகத்தில் மேற்கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வியறிவு குறைந்த மக்களை கொண்ட மாநிலங்களில் பீகார் 4வது இடத்தில் உள்ளது. அங்கு எவ்வாறு குழப்பமின்றி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம். இந்த பரபரப்பான சூழலில் நடப்பதால்தான், பீகார் சட்டப்பேரவை தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்யப்போகிறது எஸ்ஐஆர்? பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைப்பாரா? மீண்டும் பீகாரில் லாலு கட்சியின் ராஜ்ஜியம் தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் பீகார் மாநிலத்தில் முக்கியத்துவம் மிகுந்த வாக்குப்பதிவு இன்று நடக்க உள்ளது.
