அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுமா?: தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
திருப்பூர்: பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மட்டுமல்லாது பல்வேறு தொழில்கள் நடைபெறக்கூடிazzய திருப்பூருக்கு தினமும் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் அதற்கேற்றவாறு கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சர்வதேச அளவில் பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவனம் பெற்ற தொழில் நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை திருப்பூர் அளித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொய்வடைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி வருகிறது. திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவை மட்டுமல்லாது இதனை சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அனுப்பர்பாளையத்தில் பாத்திர உற்பத்தி காங்கேயம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் ஆலைகள் அரிசி ஆலைகள் பல்லடம் பகுதியில் கோழிப்பண்ணை விசைத்தறி அவிநாசி பகுதிகளில் விவசாயம் விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இவைகளில் பணிபுரிவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூர் வருகை தருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்தான ரயில் போக்குவரத்தையே நம்பி உள்ளனர். இதனால் திருப்பூர் வருவோர் மட்டுமல்லாது திருப்பூரிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதற்கேற்றவாறு ரயில்கள் இயக்கம் மற்றும் கூடுதல் பெட்டிகள் இல்லாததால் கூட்ட நெரிசல்களுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர்க்க கூடுதல் பெட்டிகளுடன் கூடுதல் ரயில்களை திருப்பூர் மார்க்கமாக இயக்க வேண்டும் என தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது: வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்குள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ரயில் வசதிகள் இல்லை. இதன் காரணமாக தொழிலாளர்களின் ரயில் பயணம் என்பது பெரும் சிரமத்திற்கிடையில் அமைகிறது. வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ஒரு சில மட்டுமே இயக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து செல்லும் வட மாநில தொழிலாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி திணறி செல்கின்றனர்.கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவு பணிபுரிவது ஒன்றிய அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து ஒன்றிய அரசு உடனடியாக தொழில் நகரங்களை இணைக்க கூடிய வகையில் புதிய ரயில் சேவைகளை அறிவிப்பது மட்டுமல்லாது அதிக பெட்டிகளுடன் கூடிய ரயில் சேவைகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அதேபோல் சில மாநிலங்களுக்கு திருப்பூரிலிருந்து நேரடி ரயில்கள் இல்லாததன் காரணமாக தொழிலாளர்கள் இங்கிருந்து 2 மற்றும் 3 ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனைத்தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய வகையிலான ரயில் சேவைகளையும் அறிவிக்க வேண்டும். மேலும் தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்கள் கூட திருப்பூரில் 2 நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது. இதற்குள் பயணிகள் தங்கள் பெட்டிகளை தேடி அமர்வது என்பது அவர்களை பரபரப்பாகவும் பதட்டத்திற்குள்ளாகவும் ஆக்குகிறது. எனவே திருப்பூரில் நின்று செல்லும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
* தொழில் நகரங்களை இணைத்து மெட்ரோ
கோவை சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தினமும் திருப்பூருக்கு ரயில் மூலமாக அதிக அளவில் வருகின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் இவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கோவையிலிருந்து துவங்கி திருப்பூர் ஈரோடு சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க வேண்டும் என தொழில்துறையினர் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
* செயல்படாத நிலையில் எஸ்கலேட்டர்
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய திருப்பூர் ரயில் நிலையத்தில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து 2வது பிளாட்பாரம் செல்வதற்காக நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிகளில் நடந்து செல்ல முடியாதவர்களுக்காக மின்தூக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்கலேட்டர் வசதிகள் அவ்வப்போது பழுதாகி செயல்படாத நிலையில் இருப்பதால் முதியவர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.