நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று உருவாக்கப்பட்ட திட்டம், ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்’’ (MPLADS). நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டு, 2011-12ம் நிதியாண்டு முதல் ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது தொகுதிகளில் மேம்பாட்டு பணிகளை பரிந்துரைக்கவும், உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் நீடித்த சமூக சொத்துகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. ஆரம்பத்தில், இந்த திட்டம் ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர், 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க துறை அமைச்சகத்தின்கீழ் (MOSPI) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், அவர்கள் விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான பணிகளை இத்திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கலாம். மாநிலங்களவை உறுப்பினர்கள், நாட்டில் எங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான பணிகளை தேர்ந்தெடுக்கலாம். தனி நபர்களின் நோக்கத்திற்காக அல்லாமல், பொது நோக்கத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
வளர்ச்சி பணிகள் அல்லாமல், மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் ரூ.25 லட்சம் வரையிலும், கடுமையான இயற்கை பேரிடர் ஏற்பட்டால் ரூ.1 கோடி வரையிலும் பணிகளை எம்.பி.க்கள் பரிந்துரைக்கலாம். மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், எம்.பி.க்கள் பரிந்துரைக்கும் பணிகளை அனுமதிக்கின்றனர். கடந்த 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுக்காக மொத்த ரூ.3,965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், 2023ம் ஆண்டு மார்ச் 30 வரை ரூ.2,387 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது, ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 60 சதவீதம் மட்டுமே. கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் 800 எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ரூ.8,917.57 கோடி நிதி ஒதுக்கியது. இதில் ரூ.2,056.87 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. 88,654 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 11,291 பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாநில சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி வழங்கப்படும் நிலையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும், தொகுதிகளின் வளர்ச்சிக்காகவும் இந்த நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் சேவை செய்வதற்கு, மக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளும் பொறுப்பு உள்ளது. அதனால், இந்த நிதியை உயர்த்துவது முக்கியம் ஆகும். இதுபற்றி ஒன்றிய பா.ஜ. அரசு, பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறது. ஆனால், தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி மூலம் கஜானாவை நிரப்பி வரும் ஒன்றிய அரசு, இந்த நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி, உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்
என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.