2,429 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; 17 லட்சம் மாணவர்கள் பயன்: அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா பேட்டி!
சென்னை: 2,429 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா தெரிவித்துள்ளார். காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 2022 செப்டம்பர் 15ம் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,545 தொடக்கப்
பள்ளிகளில் 1,14,095 குழந்தைகள் பயன்பெற்றனர். இதன் காரணமாக, 2023 மார்ச் 1ம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப் பள்ளிகளில் 56,160 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் காலை உணவை சூடாகவும், சுவையாகவும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, 2024 ஜூலை 15ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் 34,987 தொடக்கப்பள்ளிகளில் மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ - மாணவிகள் சத்தான காலை உணவு திட்டத்தினால் பயன்பெற்று வருகிறார்கள்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. 90%க்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 2025 மார்ச் 14 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நாளை காலை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் நகர்ப்புறத்தில் உள்ள 2,429 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3.06 லட்சம் மாணவ-மாணவிகள் தினமும் பயன்பெறுவார்கள்.
பள்ளிக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்தினால் பள்ளி மாணவ - மாணவிகள் எப்படி பயன்பெறுகிறார்கள் என்று மாநில திட்டக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஊரக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 100 பள்ளிகளும், 5274 பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் விவரம் வருமாறு:
* பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை விகிதம் பாலினம் மற்றும் வாழ்விடம் பாகுபாடின்றி குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
* தாமதமாக காலை 9 மணிக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சமூக-பொருளாதார பாகுபாடின்றி குறைந்துள்ளது.
* மாணவர்கள் நோய்வாய்ப்படுவதும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் குறைந்துள்ளது.
* வகுப்பறை செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதும், கற்றல் திறனில் மேம்பாடும், கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்பதும், விளையாட்டுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் அதிகரித்துள்ளது.
* ஆசிரியரின் குறிப்புரைகளை பின்பற்றுதல், கவனம் செலுத்துதல் மற்றும் எழுத்துப்பணி முடித்தல் ஆகியவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* சுமார் 80 சதவீத மாணவர்களிடம் வகுப்பில் முந்தைய பாடங்களை நினைவு கூறும் திறன் காணப்படுகிறது.
* மாணவர்களின் எழுத்து, வாசிப்பு மற்றும் பேச்சு திறன்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* இந்த திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு, குறிப்பாக பெற்றோர்கள் சீக்கிரமே வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதற்கு முன் தங்கள் பிள்ளைகள் காலை உணவை உண்ணவில்லையே என்று கவலைப்பட்ட தாய்மார்கள், தற்போது தங்கள் பிள்ளைகள் தாமே ஆர்வமுடன் காலை உணவு சாப்பிடுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.