Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மாநில சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கண்காட்சி, உணவுத் திருவிழாவினை நாளை துவக்கி வைக்கிறார் துணை முதலமைச்சர்

மதுரை: இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (22.11.2025) மதுரை, தமுக்கம் மைதானத்தில் துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சாராஸ்’ (SARAS) எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 22.11.2025 அன்று மதுரை, தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவினை துவக்கி வைக்கிறார்.

மதி கண்காட்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான மூலிகைப் பொருட்கள், சணல் பொருட்கள், துணிப்பைகள், ஐம்பொன் நகைகள், சுடுமண் பொம்மைகள், செயற்கைப் பூக்கள், நூல் வளையல்கள், மரச் சிற்பங்கள், பட்டுப் புடவைகள், எம்ப்ராய்டரி ஆடைகள், கைத்தறி துண்டுகள், கைவினைப் பொருட்கள், கண்ணாடி ஓவியங்கள், கைத்தறிப் புடவைகள், உலர் மீன்கள், மிளகு, உல்லன் ஆடைகள், மணி மலைகள், மரச்செக்கு எண்ணை, பருத்தி ஆடைகள், சங்குகள் மற்றும் சிப்பி நகைகள், ஆயத்த ஆடைகள், வெட்டிவேர் பொருட்கள், பிரம்பு பொருட்கள், தலையாட்டி பொம்மைகள், சணல் பைகள், பத்தமடை பாய்கள், தோல் பைகள், பருத்தி ஆயத்த ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், மூலிகை சாம்பிராணி, பனை பொருட்கள், செயற்கை பூ மாலைகள், கலம்காரி பைகள், கண்ணாடி மாலைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்திட 171 அரங்குகளும், இந்தியாவின் பிற மாநிலங்களான குஜராத்தின் அகர் பத்திகள் மற்றும் வாசனை திரவியங்கள், ஆந்திராவின் அழகிய மரச் சிற்பங்கள், மேற்கு வங்காளத்தின் கையால் செய்யப்படும் ஆபரணங்கள், கேரளாவின் முத்து மற்றும் கிரிஸ்டல் நகைகள், பாண்டிச்சேரியின் தரமான தேன், ஒரிசாவின் கைவினைப் பொருட்கள், தெலுங்கானாவின் கைத்தறி ஆடைகள், மகாராஷ்டிராவின் மூங்கில் கைவினைப் பொருட்கள், அரியானாவின் கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்திட 29 அரங்குகளும் என 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கவுள்ள உணவுத் திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், கேரளா மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளான வன சுந்தரி சிக்கன், மூங்கில் அரிசி பாயாசம், நைபத்திரி மற்றும் சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்திடும் வகையில் 2 கேரளா மாநில உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த பர்மா வகை உணவுகள், கொங்கு மட்டன் பிரியாணி, மீன் நக்கெட்ஸ், புட்டு அரிசி, மீன் பிரியாணி, கேரட் பாலி; செட்டிநாடு ஸ்நாக்ஸ்; கடலைக்கறி, தினை சிற்றுண்டி, எண்ணெய் பரோட்டா, நெய் சாதம், முட்டை மிட்டாய், பள்ளிபாளையம் சிக்கன் கார பணியாரம், ராகி அடை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உடனடியாக உண்ணுவதற்கும் ஏற்ற (Ready to Eat) ஆயத்த உணவு வகைகளான நிலக்கடலை பர்ஃபி, தினை லட்டு, மூலிகை பானங்கள், ஏலக்காய் பர்ஃபி, வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் வகைகள், தினை சிற்றுண்டி, தட்டு வடை, வாழை சிப்ஸ், கப் கேக்குகள், பிரவுன் கேக், தினை தின்பண்டங்கள், மணப்பாறை முறுக்கு, சத்து மாவுகள், காரசேவு உள்ளிட்ட ஆயத்த உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையில் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கவுள்ளார். அடையாள அட்டையின் மூலம், நகரப் பேருந்துகளில் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கோ-ஆப் டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகளையும், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் பெறுவதில் முன்னுரிமை பெறலாம்.

மேலும், உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரங்களில் காய்கறிகள் மற்றும் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, மின்னணு வணிகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், புதிய நிறுவனங்களை உருவாக்குதல், கண்ணாடி ஓவியம், ஆரி வேலைகள் மற்றும் செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல், ஸ்டார்ட்அப் TN துவக்குதல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டியம், கும்மிப்பாட்டு, குழு நடனம், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், கிராமியப் பாட்டுகள், தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம், ராஜ மேளம், நையாண்டி மேளம் போன்ற இசை நிகழ்ச்சிகளும், பேச்சுப் போட்டி, நாடகம் போன்றவையும் நடைபெறுகின்றன.

2025 நவம்பர் 22ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 03ஆம் தேதி வரை மதுரை, தமுக்கம் மைதானத்தில் நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம். மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவிற்கு வருகை தருபவர்களுக்கு இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சுவையும், தரமும் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.