Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளுக்கு செயல் தலைவர் பதவி ஏன்?: ராமதாஸ் பரபரப்பு பேச்சு

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் பொதுக்குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்றே்று பேசியதாவது: எனக்கு சேவை செய்யவும், உங்களுக்கும் துணையாக இருக்கவும், பெண்களுக்கு துணையாக இருக்கவும், என்னுடைய பெரிய மகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அவர் செயல் தலைவராக மக்களுக்கும், கட்சிக்கும் செய்யக்கூடிய சேவைகள் ஏராளமாக உள்ளது. நான் சொல்லும் வழியில், அதை செய்து முடிக்க செயல் தலைவராக அவரை நியமித்து இருக்கிறேன்.

ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், சினிமா உலகத்தை ஆட்டிப்படைக்கிறார். தற்போது நான் மீண்டும் அவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமித்து இருக்கிறேன். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து, துல்லியமான ஒரு தேதி டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். நிச்சயமாக வெற்றி கூட்டணியை நான் உருவாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன். அது நல்ல செய்தியாக இருக்கும். நல்ல கூட்டணியாகவும் இருக்கும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ முறையாக அறிவிக்கப்படும், என்றார். திமுகவுடன் கூட்டணியா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, போக, போக தான் தெரியும் என பாட்டு பாடி பதிலளித்தார்.

அக்காவுக்கு கட்சி பதவி குறித்த கேள்வியால் கடுப்பான அன்புமணி: உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கணபதிபாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய அளவில் தமிழ்நாடு மஞ்சள் உற்பத்தியில் 3வது மாநிலமாக உள்ளது. இந்தியாவில் 7.5 லட்சம் ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.50 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1 முதல் 1.25 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மஞ்சளில் 80 சதவீதம் அளவு ஈரோட்டில் உற்பத்தியாகிறது. ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது பெருமைக்குரியது. மஞ்சள் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும் என்றார்.அப்போது, பாமகவின் செயல்தலைவராக அவரது அக்கா காந்தியை, ராமதாஸ் நியமித்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி செய்தியாளர்கள் கேட்டதால், கடுப்பான அன்புமணி, பேட்டியை முடித்துக்கொண்டு அங்கிருந்து விருட்டென கிளம்பினார்.