80,000 பேர் கூடியிருந்த மைதானத்தில் நிறுத்தி 13 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: 13 வயது ஆப்கான் சிறுவன் சுட்டுக்கொன்றான்
கோஸ்ட்: ஆப்கானிஸ்தானில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை கொலை செய்த குற்றவாளியை, 13 வயது சிறுவன் ஒருவன் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளான். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த மங்கல் என்ற நபர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் உட்பட மொத்தம் 13 பேரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்திருந்தான். இந்தக் கொடூரச் செயல் தொடர்பான வழக்கு தலிபான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விரும்பினால் குற்றவாளியை மன்னிக்கலாம் என்ற விதிமுறையின் கீழ் சமரசத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், ‘எங்கள் குடும்பத்தை அழித்தவனை மன்னிக்க முடியாது, அவனுக்கு மரண தண்டனை மட்டுமே வேண்டும்’ என்று பாதிக்கப்பட்ட தரப்பு உறுதியாகத் தெரிவித்ததால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தலிபான் உச்ச தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், நேற்று கோஸ்ட் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் திரண்டிருந்த நிலையில், தலிபான் அதிகாரிகள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் கையில் துப்பாக்கி வழங்கப்பட்டது. அந்தச் சிறுவன், அனைவரின் கண்முன்னே குற்றவாளியைச் சுட்டுக் கொன்று தண்டனையை நிறைவேற்றினான். தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் 11வது பகிரங்க மரண தண்டனை இதுவாகும்.
சிறுவனை வைத்து நிறைவேற்றப்பட்ட இந்தச் சம்பவத்திற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுவெளியில் நடைபெறும் இத்தகைய தண்டனைகள் மனிதப் பண்பற்றவை மற்றும் இழிவானவை என்று ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

