Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடக்கம்

சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் தெரிவித்ததாவது:-செல்லப் பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தி கண்காணிப்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை :

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன் படி சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. செல்லப்பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50/-ஐ உரிமக் கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2025 - செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள் மற்றும் உரிமையாளர்களின் பொறுப்புகள்:

* கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணியின் உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

* பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை/தெரு/சாக்கடையிலும் தனது நாய்/செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை/ தெரு/ சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவதை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

* தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும்.

* செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விடுதல் அல்லது அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர் இந்த நிபந்தனைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கைவிடப்படும் செல்லப்பிராணிகளை கண்காணித்தல்:

சமீபகாலமாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கைவிடப்படும் (Abandoning) வளர்ப்பு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆகவே, செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி போட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை (Pet Abandonment) தடுக்கவும், அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப்பிங் செலுத்துவதும் பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும்.

செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணி மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் பணி 08.10.2025 முதல் தொடங்குதல்

மேற்கண்ட மைக்ரோ சிப்பிங் பொருத்தும் பணி மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துவது பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுபாட்டில் இயங்கும் கீழ்காணும் 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் 08.10.2025 அன்று முதல் இலவசமாக செயல்படுத்தப்படவுள்ளது.

1. திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-6

2. புளியந்தோப்பு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-6

3. லாயிட்ஸ் காலனி செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-9

4. நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-9

5. கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-10

6. மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், மண்டலம்-12

பதிவேற்றப்பட்ட விவரங்கள் மற்றும் மைக்ரோசிப் பதிவு எண்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கப்படவுள்ளது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தனியார் கால்நடை மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் கால்நடை மருத்துவர்கள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோசிப் பொருத்துதல் ஆகியவைற்றை உறுதிசெய்த பின்னரே மாநகராட்சியால் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சிப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று உரிமையார்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் குறித்த கணக்கெடுப்பும், உரிமம் வழங்குவதற்கான உரிய வழிகாட்டுதல்கள் குறித்த அறிவுறுத்தலும் வழங்கும் பணி வருகின்ற நவம்பர் மாதம் முதல் வீடுவீடாகச் சென்று மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்றும், உரிமம் பெறப்பட்டுள்ளதா என்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, செல்லப்பிராணி வளர்ப்போரிடம் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கும், அந்த நாள் முதல் உரிமம் பெறுவதற்கும், மைக்ரோ சிப் பொருத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்படும்.

தெருநாய்களின் இனக்கட்டுபாட்டு சட்டம் மற்றும் விதிகள் :

தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம், 1960ன் பிரிவு 38ன் கீழ் நாய் இனக்கட்டுபாட்டு விதிகள்-2023க்குட்பட்டு தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகு நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்களில் பராமரித்து, வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

தெருநாய்களின் இனக்கட்டுபாட்டு திட்டத்தை முறைப்படுத்துதல்:

தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும் 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, நாய்களைப் பிடித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாய்களைப் பிடிப்பதற்காக வலைகள் வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படுகின்றன.

நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக, QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,250 தெருநாய்களுக்கு QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 (செப்டம்பர் வரை) 72,345 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடவடிக்கைகள்

மாண்புமிகு மேயர் அவர்களின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி செலுத்தும் திட்டம் மாண்புமிகு மேயர் அவர்களால் கடந்த 09.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 67,297 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் 2,3,4,5,6,12,13&14 ஆகிய 8 மண்டலங்களில் இத்திட்டம் நிறைவடைந்துள்ளது.

இதர 7 மண்டலங்களில், தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு நவம்பர் மாதத்தில் இப்பணிகள் நிறைவு பெறும்.

புகார் தெரிவித்தல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாய்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்கிற எண்ணிலும், மக்கள் சேவைக்கான வாட்ஸ்அப் 9445061913 என்கிற எண்ணிலும் புகாரினைத் தெரிவிக்கலாம். செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களின் ஒருங்கிணைக்கப்பட்ட மேலாண்மைக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களின் ஒருங்கிணைக்கப்பட்ட மேலாண்மைக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை (www.chennaicorporation.gov.in-ல் Pet Licence) செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மேயர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் மு‌ மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப. ஜெயசீலன், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் ஜே. கமால் உசேன், மற்றும் கால்நடை மருத்துவர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.